தமிழர் மரபு, பண்பாடு மற்றும் மெய்யியல் ஆய்வாளரும், திராவிட இயக்க சிந்தனையாளரும், தமிழீழ ஆதரவாளரும், தமிழ்த்தேசிய கோட்பாட்டையும் முன்னகர்த்தி அரசியற்படுத்திய ஆய்வறிஞருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் மறைந்தார். அவருக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது. (நவ 4, 2022)

தமிழர் மரபு, பண்பாடு மற்றும் மெய்யியல் ஆய்வாளரும், திராவிட இயக்க சிந்தனையாளரும், தமிழீழ ஆதரவாளரும், தமிழ்த்தேசிய கோட்பாட்டையும் முன்னகர்த்தி அரசியற்படுத்திய ஆய்வறிஞருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் மறைந்தார். அவருக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது. (நவ 4, 2022)

“வைதீகம் என்று தலை தூக்கத் தொடங்கியதோ அன்றுதான் இந்திய சமூக வரலாறு போராட்ட வரலாறாக மாறியது” – பேராசிரியர் க.நெடுஞ்செழியன்

தமிழர்களின் ஆதி மரபாகிய ஆசிவகத்தின் உள்ளீடுகளையும், அதன் எச்சங்கள் எவ்வாறு இன்னும் தமிழர்களின் வாழ்வியலில் காணப்படுகிறது என்பது பற்றியும் மிக விரிவாக எடுத்துரைத்தவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆவார். தமிழர் தம் மெய்யியல் கோட்பாட்டை சம கால அரசியலுடன் இணைத்து தெளிவுபடுத்தியதன் மூலம் ஆரிய வைதிக மரபு வேறு தமிழர் மரபு வேறு என்றும் உலகுக்கு உணர்த்தியவர்.

திராவிட இயக்க சிந்தனையாளரும், பெரியாரிய உணர்வாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தமிழ்தேசிய கருத்தியலை ஆதரித்தவர். அவருடைய எழுத்துகள் நீண்ட கால ஆய்வின் அடிப்படையில் அமைந்த மறுக்க முடியாத சான்றுகளாய் விளங்கி, தமிழ்த்தேசிய அரசியலுக்கு துணையாய் விளங்குகின்றன.

ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், சமணர் என்போர் சைனரா: வினாவும் விடையும், சமூகநீதி, தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்?, பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும் போன்ற அவரது நூல்கள் தமிழர்களின் பண்பாட்டையும் அரசியலையும் எடுத்துரைக்கும் அறிவுக் களஞ்சியங்கள் ஆகும். குறிப்பாக அவரது ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்ற நூல் தமிழர் மெய்யியலில் குறிப்பிடத்தக்க நூலாகும். தமிழர்தம் இயற்கை வழிபாடு எவ்வாறு உருவ வழிபாடாக மாற்றப்பட்டது என்பதை ஆய்வின் அடிப்படையில் இந்நூல் விளக்க வல்லது.

இந்துத்துவ மத மரபிலிருந்து வேறுபட்ட தமிழர் வாழ்வியலை உரக்க உரைத்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

Leave a Reply