தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன எரிக் சோல்ஹெய்மை தமிழ்நாட்டு காலநிலை மாற்ற ஆலோசனைக் குழுவிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்! – நவம்பர் 3 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்!

தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன எரிக் சோல்ஹெய்மை தமிழ்நாட்டு காலநிலை மாற்ற ஆலோசனைக் குழுவிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்! – நவம்பர் 3 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்! – மே பதினேழு இயக்கம்

தமிழ் நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ் நாட்டின் காலநிலை மாற்ற ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 22 பேர் கொண்ட இந்த குழுவில் நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹெய்ம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்த தூதராக இருந்த எரிக் சோல்ஹெய்ம், மேற்குலக நாடுகளின் செயல்திட்டத்தை திணித்து, சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போனவர். இப்படியான ஒருவர் தமிழ் நாடு அரசின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எரிக் சோல்ஹெய்ம், 2002-இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையே உருவான போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தின் நார்வே நாட்டு தூதுவராக இருந்தவர். ஆனால், சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர். போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்த இவர், தமிழர்கள் மீது இலங்கை நடத்திய இனப்படுகொலைக்கு சாட்சியாக இருந்தவர். இறுதிப் போரின் வெள்ளைக் கொடி சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர். அந்த பட்டியலில் 12 வயது சிறுவன் பாலசந்திரன் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் எனில், அதில் எரிக் சோல்ஹெய்ம் பங்கு என்ன என்பது கேள்விக்குரியது.

அதோடு மட்டுமல்லால் அமெரிக்காவின் புவிசார் அரசியலை ஈழ விவகாரத்தில் திணித்ததன் மூலம், அமைதி ஒப்பந்தம் சீர்குலைவதற்கு காரணமாக இருந்தவர். மேலும், அதன் பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தியவர். இதன் காரணமாக ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக காரணமாக அமைந்தவர். தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சாட்சியான இவர், அதனை மறைத்து விடுதலைப் புலிகள் மீது அவதூறுகள் பரப்பி வந்தார். இதற்கு தமிழர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக சில காலம் அமைதியாக இருந்தார்.

பின்னர், 2016-இல் ஐநாவிற்கான சுற்றுச்சூழல் திட்டத் தலைவராக எரிக் சோல்ஹெய்ம் நியமிக்கப்பட்டார். ஆனால், சுற்றுச்சூழல் பேணல் குறித்து சிறிதும் கவலையின்றி விதிமுறைகளை மீறி அதிகளவில் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். இதனால் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முறைகேடாக செலவு செய்தது சர்ச்சையானது. மேலும், ஒரு ஐநா தலைவராக இவர் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒரு நார்வே நிறுவனம் இவரது மனைவியை பதவியில் அமர்த்தியதால் ஐநாவிற்கு நெருக்கடி உண்டானது. இவ்வாறு பல சர்ச்சைகளுடன் 2 ஆண்டுகளில் பதவியை விட்டு விலகினார்.

அதன்பிறகு, ஐநா தீர்மானங்கள் மூலம் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி வழங்குவதில் தோல்வியுற்ற மேற்குலக நாடுகள், தங்கள் தோல்வியை மறைக்க, மீண்டும் விடுதலைப்புலிகள் மீது அவதூறுகள் பரப்ப எரிக் சோல்ஹெய்மை பயன்படுத்திக்கொண்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது காலநிலை மாற்றம் குறித்த இலங்கை அதிபருக்கான சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு தூதுவராக இருந்த ஒருவரை இன்று இலங்கை அரசு ஆலோசகராக நியமித்ததற்கு காரணம் அவர் தமிழினப்படுகொலையில் இலங்கைக்கு உதவியதே.

அப்படியான ஒருவர், முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ் நாட்டின் காலநிலை மாற்ற ஆலோசனைக் குழுவில் இடம்பெறுவது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடியதாகும். சுற்றுச்சூழல் குறித்த போதிய அறிவு இல்லாத, அதுவும் தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன, இலங்கை அரசுக்கு ஆலோசகராக இருக்கும் எரிக் சோல்ஹெய்ம் தமிழ் நாடு அரசின் குழுவில் எந்த அடிப்படையில் இடம்பெற்றுள்ளார் என்ற கேள்வி எழுகிறது.

திமுக அரசு உடனடியாக அவரை காலநிலை மாற்ற ஆலோசனைக் குழுவிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி, வரும் நவம்பர் 3 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழின ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக ஒன்றுதிரண்டு எதிர்ப்பினை பதிவு செய்வோம். எரிக் சோல்ஹெய்ம் நீக்கப்படும் வரை தமிழர்களின் போராட்டம் தொடரும் என்பதை அறிவிப்போம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply