தமிழ் மண்ணிலிருந்து பட்டியல் சமூக மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் இரட்டை வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான ‘திவான் பகதூர்’ இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77-வது நினைவுநாளில் (செப்டம்பர் 18, 1945) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்!

தமிழ் மண்ணிலிருந்து பட்டியல் சமூக மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் இரட்டை வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான ‘திவான் பகதூர்’ இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77-வது நினைவுநாளில் (செப்டம்பர் 18, 1945) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்

வருணாசிரம கட்டமைப்பின் அடிப்பாகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பட்டியல் சமூக மக்களின் விடுதலை குறித்து தமிழ்நாட்டில் பலரும் போராடி இருக்கின்றனர். அவர்கள் மறக்க முடியாத சாதி ஒழிப்பு போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசனார் ஆவார். வழக்கறிஞர் கல்வி கற்று, அரசியல் மற்றும் சமூகப் பணி செய்வதற்காக முன் வந்த ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஆங்கிலேயே அரசு ஆட்சியின்போது 1923 முதல் 1939 வரை பட்டியல் சமூக மக்களின் பிரதிநிதியாக அன்றைய சென்னை மாகாண சட்டசபையில் நியமனம் செய்யப்பட்டார். அக்காலத்தில் சென்னை மாகாணம் முழுவதும் எந்த சாதிய சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி பொது வழியை பயன்படுத்துவதற்கு தடை செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தவும் செய்தார்.

1922-ஆம் ஆண்டு சட்டசபையில் எம்.சி.ராஜா அவர்களால் கொண்டுவரப்பட்ட ‘பறையர் பள்ளர்’ என்ற பெயர்கள் நீக்கப்பட்டு ‘ஆதிதிராவிடர்’ என்று அழைக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும், அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படாமையை சுட்டிக்காட்டி, அன்றைய முதலமைச்சராக இருந்த திரு.பனகல் அரசர் அவர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தினார்.

மேலும் அன்று நடைமுறையிலிருந்த மணியக்காரர் என்கின்ற பரம்பரை தொழிலின் காரணமாக பட்டியல் சமூக மக்கள் தவிர்க்கப்படுகிறார்கள் என்பதை முன்னிறுத்தி பரம்பரை மணியக்காரர் தொழில் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் முன்மொழிந்தார். அதுமட்டுமல்லாது பட்டியல் சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த உரிமைகளைப் பற்றியும், அவர் பஞ்சமி நிலங்களின் நிலை பற்றியும் தொடர்ச்சியாக பேசி வந்தார்.

ஆங்கிலேயே அரசினை சந்திக்க லண்டன் வரை பயணம் செய்திருந்த இரட்டைமலை சீனிவாசனார் அங்கு பட்டியல் சமூக மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார். மேலும் ஒவ்வொரு முறையும் ஆங்கில அரசிடம் பட்டியல் சமூக மக்களின் மீது உயர்சாதி இந்து என்று தங்களை அழைத்துக்கொள்ளும் மக்கள் எவ்வாறெல்லாம் அடக்குமுறையை செலுத்துகிறார்கள் என்பதை விளக்கி அவற்றை நீக்க கோரிக்கை வைத்தார். குறிப்பாக பார்ப்பனர்கள் தெருவில் ‘பறையர்கள் வரக்கூடாது’ என்று தீண்டாமை பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நீக்கவும், பச்சையப்பன் கல்லூரியில் பட்டியல் சமூக மக்களின் பிள்ளைகளை சேர்க்க மறுப்பதை தடுக்கவும் முயற்சித்து வெற்றி பெற்றார்.

பட்டியல் சமூக மக்கள் இந்துக்கள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த ஐயா இரட்டைமலை சீனிவாசனார் “இந்துக்கள் அனுசரிக்கும் நான்கு வர்ணங்களில் ஒன்றிலேனும் சேராது இருந்ததால் தாழ்த்தப்பட்டோர் இந்துக்களில் அடங்கவில்லை என்பது வெளிப்படை” என்று தனது ஜீவிய சரித்திர சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அன்றைய காங்கிரஸ் கட்சி உயர்சாதியினரின் கையில் சிக்கிக் கொண்டிருப்பதை எடுத்துரைக்கும் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள் “இந்திய காங்கிரஸ் பெரும் தனவந்தர், மேதாவியாருமே இருந்து நடத்தி அரசாட்சியை கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கத்துடன் பேசியும் நடவடிக்கை நடத்தியும் வந்தார்களே ஒழிய, கோடிக்கணக்கானவர்கள் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, மிக ஏழ்மைதனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இருக்கும் தங்கள் இனத்தவரின் முன்னேற்றத்தை பற்றி சிறிதும் நினைத்தாரில்லை” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாக விடுதலை கிடைத்து விடுவதற்கு முன்னரே பட்டியல் சமூக மக்கள் தங்கள் விடுதலைக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று எச்சரிக்கையும் செய்தார். விடுதலை கிடைத்துவிட்டால் இந்நாடு உயர்சாதியினரின் மனம் போலவே செயல்படும் என்றும் கூறிவந்தார். இதைப் பற்றி தனது ஜீவிய சரித்திர சுருக்கத்தில் “ காங்கிரஸ்காரரும் ஜாதி இந்துக்களும் சுயராஜ்ய முறையில் ஆட்சி செய்கிறார்கள். இன்னும் பூரண சுயராஜ்யம் பெற பாடுபடுகிறார்கள். அவர்கள் அதை கைப்பற்றும் முன் எதிர் மறுத்து நின்று ஆதி திராவிடர்கள் தங்கள் சமூகத்தை வலியுறுத்தி தீவிரமாக கரை ஏற வேண்டும். கஷ்டமும் நஷ்டமும் தங்களுக்கு உண்டாகும் என ஜாதி இந்துக்கள் உணர்ந்துவிட்டால் தாழ்த்தப்பட்டோருக்கு வழி விட மாட்டார்கள் என்பது எனது அனுபவம்” என்று குறிப்பிடுகிறார்.

இன்றளவும் உண்மை இவ்வுண்மையை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ‘இந்திய ஒன்றியம் என்பது இந்துக்களில் உயர் சாதியினராக இருக்கக்கூடிய பார்ப்பனர்களுக்கும் அவர்களுக்கு அடிபணிந்து நடக்க தயாராக இருக்கின்ற பிற சாதியினருக்கு மட்டுமே வழி விடுகிறது’ என்ற அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் போன்றவர்களின் கருத்தை மிக ஆணித்தரமாக உறுதி செய்கின்ற ஐயா இரட்டைமலை சீனிவாசனாரின் வரிகள் எவ்வளவு உண்மை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய ஒன்றியம் வடக்கிலிருந்து கிழக்கு வரை பல்வேறு தேசிய இனங்களாலும், கலாச்சார கூறுகளாலும் மாறுபட்டு கிடந்தாலும் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் மீது அடக்குமுறையை செலுத்துவதில் மட்டும் ஒற்றுமையுடன் நிலைத்து வருகிறது. இதனை அன்றே உணர்ந்து முன் நின்று கூறியவர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனார் என்று கூறினால் அது மிகையாகாது.

தமிழ் மண்ணிலிருந்து பட்டியல் சமூக மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் இரட்டை வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77-வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply