மூவர் தூக்கை தடுத்து நிறுத்த தன்னுயிர் ஈந்த தழல் ஈகியர் தோழர் செங்கொடி அவர்களின் 11-வது நினைவுநாளில் (28-08-2011) வீரவணக்கம் செலுத்துவோம்!

மூவர் தூக்கை தடுத்து நிறுத்த தன்னுயிர் ஈந்த தழல் ஈகியர் தோழர் செங்கொடி அவர்களின் 11-வது நினைவுநாளில் (28-08-2011) வீரவணக்கம் செலுத்துவோம்! – மே பதினேழு இயக்கம்

இராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறைபட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி கிடைக்காமல் வாடிக்கொண்டிருக்கும் 7 நிரபாராதித் தமிழர்களின் விடுதலையை தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தது. 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஏழு தமிழர்களில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு மட்டும் தூக்குத் தண்டனையும் இறுதியாக உறுதி செய்யப்பட்டது.

பலமுறை மூன்று தமிழர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட இந்திய ஒன்றியத்தால் முயற்சி எடுக்கப்பட்டாலும், மக்கள் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டங்களால் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2011-ம் ஆண்டும் அவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விடவே செப்டம்பர் 9-ம் தேதி மூன்று நிரபராதித் தமிழர்களையும் தூக்கிலிடுவது என்று இந்திய ஒன்றிய அரசு முடிவெடுத்திருந்தது.

இதனை எதிர்த்து தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. காஞ்சிபுரத்தில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்களில் ஒருவரான தோழர் செங்கொடி அவர்கள், தன் இன்னுயிரை தந்தாவது ‘மூன்று தமிழர்களின் தூக்குத்தண்டனையை தடுத்துவிட வேண்டும்’ என்று முடிவெடுத்து ஆகஸ்டு 28-ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்னால் உயிர் ஈகம் செய்தார். அவரது உயிர் பிரியும் வேளையிலும் “மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்! அவர்களை விடுதலை செய்!” என்று முழக்கமிட்டபடியே ஈகியரானார். அப்பொழுது அவர் இறுதியாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் “தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். – இப்படிக்கு தோழர் செங்கொடி” என்று பதிவிட்டிருந்தார்.

எந்த மூன்று தமிழர்களின் உயிர் காக்க தோழர் செங்கொடி அவர்கள் தழல் ஈகியரானாரோ, அவர்களில் ஒருவரான தோழர் பேரறிவாளன் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தோழர் செங்கொடி அவர்களின் ஈகத்தை கொச்சைப்படுத்த நினைத்த பார்ப்பன ஊடகங்களின் பொய் முகங்களும் கிழிக்கப்பட்டுள்ளன. மீதம் இருக்கும் 6 நிரபாராதித் தமிழர்களும் விடுதலையாகும் பொன்னாளே தோழர் செங்கொடியின் ஈகத்திற்கு நாம் ஈடு செய்யும் நன்னாள்.

இன்னாளில், மூன்று நிரபராதி தமிழர்களின் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த தழல் ஈகியரான தோழர் செங்கொடி அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply