உழைக்கும் வகுப்பினரின் உலகளாவிய தினமான உழைப்பாளர் தினத்தில் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்

உழைக்கும் வகுப்பினரின் உலகளாவிய தினமான உழைப்பாளர் தினத்தில் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் – மே பதினேழு இயக்கம்

“எழுக சூரியனே! எழுக.. உன்னைப்
பிணிக்கும் மேகச் சங்கிலிகளைத் தவிர
இழப்பதற்கு உனக்கு என்ன இருக்கிறது?”
– கவிஞர் இன்குலாப்

மேதினம் என்றும், உழைப்பாளர் தினம் என்றும் அழைக்கப்படும் மே-1 அனைத்து நாடுகளின் பாட்டாளி வர்க்கம் தங்கள் அடிப்படை உரிமைகளான 8 மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம், பணிப்பாதுகாப்பு போன்றவைகளுக்காக உயிர் நீத்த ஹே சந்தை (Hay Market) ஈகியர்களை நினைவு கூறும் நாளாக இருந்து வந்துள்ளது. ஆனால் நாம் சமகால முதலாளித்துவ அரசாங்கத்தின் கோரப்பிடியில் இந்த தினம் மேலும் பல முக்கியத்துவத்தையும் பெறுகிறது.

இந்திய ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி போன்ற பாசிச கும்பல் பெரும்பான்மை ஆட்சியில் அமர்ந்திருக்கும் போது, குறிப்பாக அக்கும்பலின் ஒவ்வொரு பொருளாதாரக் கொள்கையும் தரகு முதலாளிகளின் நலனுக்காகவும், பன்னாட்டு பெருநிறுவனங்களின் ஆதாயத்திற்காகவும் திட்டமிடப்பட்டு அதில் கிடைக்கும் வலதுசாரி ஆதரவின் அடிப்படையையும், அவர்கள் ‘தாராளமாக’ அள்ளித்தரும் அதீத நிதி கட்டமைப்பையும் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட கால திட்டமான இந்நிலப்பரப்பின் பல்வகைப்பட்ட தேசிய இனங்களை முற்றிலும் ஒழித்துவிட்டு, இல்லாத ‘இந்துதுவ தேசிய இனத்தை’ உருவாக்கும் அகண்ட பாரத திட்டத்தை முன் வைக்கும் போது பாட்டாளி வர்க்கத்தினரின் தினமான இம்மேதினம் மேலும் முக்கியத்துவம் அடைகிறது.

அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதே தங்கள் ஒற்றை தலையாய பணியாக கொண்டு இயங்கும் இடைத்தரகர் அரசான மோடி அரசின் ஆட்சியில் இதுவரை 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயக்கமாக்க பட்டிருக்கின்றன. இதில் அரசு விமான சேவையான ஏர் இந்தியாவும் அடக்கம். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது அரசு காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தை தனியார்மயமாகாவும், இந்திய ரயில்வேவை தனியார்மயமாக்கவும் மோடி அரசு முடிவெடுத்து திட்டடங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

ஏற்கனவே குஜராத் பனியா முதலாளியான அதானிக்கு இந்திய ஒன்றியம் முழுவதும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. இந்திய ஒன்றியத்தில் நிலக்கரி பற்றாக்குறை தற்போது நிலவி வரும் நிலையில் கடந்த பாஜக ஆட்சியில் அதானிக்காக ஆஸ்த்ரேலியாவில் நிலக்கரி சுரங்க ஒப்பந்தம் போட மோடி அரசு முடிவெடுத்தது.

அதுமட்டுமல்லாமல் மற்றுமொரு குஜராத் பனியா முதலாளியான அம்பானிக்காக இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமாக BSNL திட்டமிட்டு முடக்கப்பட்டது. எரிபொருள் கொள்முதல் மற்றும் விலை நிர்ணயிப்பை தனியாரிடம் கொடுக்கும் ‘தேசபற்று வேலையை’ காங்கிரஸ் தொடங்கிவைக்க, அதை பாஜக பாதுகாத்து வருகிறது.

பணமதிப்பிழப்பு, GST வரி முறை என்று ஒவ்வொரு சட்டத் திருத்தத்தின் பின்னும் இந்திய ஒன்றிய முதலாளிகளின் நலன் ஒளிந்து கிடக்கிறது. பாஜகவின் தனியார் முதலாளிகளின் பாசம் இதோடு நிற்காமல் 705 உழவர்களை பலி வாங்கிய வேளாண் மசோதாவை வலுக்கட்டாயமாக இந்திய ஒன்றிய உழவர்கள் மேல் திணிக்க முயன்றது. இம்மசோதாவின் பின்புலத்தில் இருப்பதும் பெரு முதலாளிகளின் நலனே தவிர வேறொன்றுமில்லை.

இவை ஒருபுறம் இருக்க இந்திய தொழிலாளர் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் சட்ட வரைவுகளை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் பாஜக ஆட்சியில் பணிப்பாதுகாப்பின்மையும், வேலைவாய்ப்பின்மையும் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருக்கிறது. குறிப்பாக கொரானா தொற்றால் முடக்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் மீண்டு எழமுடியாதபடி GST பார்த்துக்கொண்டது. அதில் வேலை செய்த புலம் பெயர் தொழிலாளர்களை கால்நடையாக 2000 கி.மீ வரை நடக்கச் செய்ய வைத்ததன் மூலம் பாஜகவிற்கு வாக்கு செலுத்திய பலனை மோடி அரசு உணர்த்தியது.

இவை எல்லாமே உழைக்கும் வகுப்பினருக்கு எதிராக மோடி அரசின் செயல்பாடுகளின் சிறு எடுத்துக்காட்டேயாகும். முதலாளத்துவ பொருளாதார வல்லுனர்களே பதறிப்போய் எச்சரிக்கும் அளவிற்கு மோடி அரசு இங்கு தொழிலாளர் வகுப்பினரை கொடுமைக்கு உட்படுத்துகிறது.

மே தினத்தை கொண்டாடும் இக்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய எதிர்ப்பானது பாசிச மோடி ஆட்சியின் காலத்தில் சிதைக்கப்பட்ட தொழிலாளர் வகுப்பினரின் வலியின் அடிப்படையில்தான். அவ்வகையில் இந்தியாவில் முதல் உழைப்பாளர் தினத்தை கொண்டாடிய பொதுவுடைமைவாதி ‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலரை நினைவுகூர்ந்து, தனியார்மயம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை எதிர்த்து உழைப்பாளர்களின் உரிமைகளை மீட்போம் என்று உறுதி ஏறப்போம்.

பாட்டாளி வர்க்க தோழர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply