சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் மாணவிக்கு நீதி வழங்கிடு! ஐஐடி நிர்வாகம், பேராசிரியர்கள், காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடு!

சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் மாணவிக்கு நீதி வழங்கிடு! ஐஐடி நிர்வாகம், பேராசிரியர்கள், காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த தலித் மாணவி ஒன்றிய அரசின் உயர் தொழிற்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பிஎச்டி படிப்பை கடந்த 2017 முதல் மேற்கொண்டு வருகிறார். இவர் சக மாணவர்களால் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத ஐஐடி நிர்வாகம், ஓராண்டிற்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறை, மாணவர்களின் பாலியல் சுரண்டலுக்கு துணை போன பேராசியர்கள் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

அதே மேற்கு வங்கத்தை சேர்ந்த முதல் குற்றவாளியான உயர்சாதியை சேர்ந்த கிங்ஷீக்தேவ் ஷர்மா மற்றும் சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் தலித் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தவறான முறையில் புகைப்படம் எடுத்து அவரை தொடர்ந்து பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது பிஎச்டி இணை வழிகாட்டியிடம் புகாரளித்த போது அவர் மாணவியை சாதிரீதியாக கொச்சைப்படுத்தியதோடு, மாணவர்களின் பாலியல் சுரண்டலுக்கு துணை போயுள்ளார். மேலும், மாணவி தனது ஆய்வை தொடர்வதற்கும் தடையாக இருந்துள்ளார்.

பல்வேறு தரப்பிலிருந்து ஊக்கம் கிடைத்ததால் ஐஐடி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அதனை ஐஐடி நிர்வாகம் முறையாக விசாரிக்காததோடு, மாணவி தனது ஆய்வை சமர்ப்பிக்கும் வரை குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் தமது ஆய்வை சமர்ப்பிக்கவும், ஐஐடி வளாகத்திற்குள் நுழையவும் தடை விதித்தது. ஆனால், மாணவர்கள் தொடர்ந்து இணையம் வழியாக அதே மாணவியின் வகுப்பில் கலந்துகொண்டு ஆய்வை தொடர்ந்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மாணவி ஆய்வகத்தை பயன்படுத்துவதற்கும், ஆய்வுக்கான வேதிப்பொருட்களை பெறவும் தடை ஏற்படுத்தியுள்ளனர்.

இறுதியாக அந்த மாணவி மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ளாமலும், குற்றத்திற்கு ஆதாரமான மாணவர்களின் செல்ஃபோன்களை கைப்பாற்றாமலும் காலம் தாழ்த்தியுள்ளனர். ஓராண்டிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதிலும் பாலியல் வன்கொடுமை பிரிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பின்பு, 9 மாதங்களுக்கு பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்காதது தற்போது தெரிய வந்துள்ளது. காவல்துறையினரின் விசாரணையை காட்டி ஐஐடி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கடந்த 4 ஆண்டுகளாக மாணவி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐஐடி நிர்வாகம், வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர்கள், காவல்துறை என அனைத்து தரப்பிலிருந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதன்மை காரணமாக இருப்பது மாணவியின் சாதி. பட்டியல் சமூகத்தவர்கள், சிறுபான்மையினர்கள் மீது உயர்சாதி பார்ப்பனர்களால் நிரம்பியுள்ள ஐஐடியின் ஒடுக்கமுறை பலமுறை நடந்தேறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாத்திமா லத்தீப் என்னும் மாணவி தனது மரணத்திற்கு உயர்சாதி பார்ப்பனரான சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் தான் காரணம் என்று கூறியும் இன்றளவும் பெரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடும், அதனால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் மரணிப்பதும் தொடர் நிகழ்வாகி போனது. குற்றச்செயல்களில் உயர்சாதி பார்ப்பனர்கள் ஈடுபடுவதால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாதது இதற்கு காரணமாக அமைகிறது. தற்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த தலித் மாணவியின் புகாரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததோடு, குற்றச்செயலுக்கு உடந்தையாகவும் இருந்துள்ளனர். காவல்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றத்தை மூடி மறைக்க முயன்றுள்ளனர்.

ஐஐடியில் தொடரும் சாதி அடிப்படையிலான குற்றச்செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மேற்கு வங்க தலித் மாணவியின் புகாரை கொண்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ள ஐஐடி நிர்வாகத்தினர் மீதும், குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் மீதும், தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply