புரட்சியாளர் தோழர் ஸ்டாலின் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் செவ்வணக்கம் செலுத்துகிறது – 5.3.1953

புரட்சியாளர் தோழர் ஸ்டாலின் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் செவ்வணக்கம் செலுத்துகிறது – 5.3.1953

“முதலாளித்துவம் உயிரோடு இருக்கும் வரை, அதனுடன் பிறந்த வியாதியான வறுமையும், பொதுமக்களிடம் பிற்போக்குத் தன்மையும் இருந்ததே தீரும்.”

புரட்சியாளர் ஸ்டாலின் அவர்களின் இந்த வரிகள் உழைக்கும் வர்க்க சமுதாயத்தின் இறுதி இலக்கை தெளிவாக விளக்குகிறது. ஆம்; நூறு விழுக்காடு முதலாளித்துவத்தின் வீழ்ச்சியே இடதுசாரிகளின் இறுதி இலக்காகவும், செயல் திட்டமாகவும் இருக்கவேண்டும் என்ற உறுதிப்பாடு இவ்வரிகளில் வெளிப்படுகிறது.

புரட்சியாளர் தோழர் லெனின் அவர்களின் மறைவுக்குப்பின் மேற்குலக முதலாளித்துவ ஏகாதிபதிய வலதுசாரி நாடுகளின் சதித்திட்டங்களை முறியடித்து சோவியத் ரஷ்யாவை காத்து நின்ற மாபெரும் தலைவராக இருந்தவர் புரட்சியாளர் தோழர் ஸ்டாலின் அவர்களே.

மார்க்சிய சித்தாந்தம் பற்றிய தோழர் ஸ்டாலின் அவர்களின் பார்வை மிக கவனிக்கத்தக்காதாக இருந்தது. வரலாற்று பொருள்முதல்வாதம் மற்றும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றி மிக விரிவாக எழுதியவர் தோழர் ஸ்டாலின் அவர்கள். கட்சி மற்றும் இயக்க உறுப்பினர்கள் பற்றி தோழர் ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ள கீழ்க்காணும் கருத்து மிக முக்கியமானது.

“கட்சி உறுப்பினர் ஒருவர் கட்சி திட்டத்தையும், செயல் தந்திரங்களையும், அமைப்புக் கண்ணோட்டங்களையும் ஒப்புக்கொண்டால் மட்டும் போதுமா? அத்தகைய ஒருவரை பாட்டாளி வர்க்க இராணுவத்தின் உண்மையான தலைவர் என்று கருத்தமுடியுமா? நிச்சயமாக முடியாது. உலகில் ஏராளமான வாய்வீச்சுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கட்சியின் திட்டத்தையும், செயல் தந்திரங்களையும், அமைப்புக் கண்ணோட்டங்களையும் சிறிதும் தயக்கமின்றி ‘ஒப்புக் கொள்வார்கள்’. ஆனால் அவர்கள் வேறெதுவும் செய்ய இயலாதவர்கள் – வெறும் வாய்வீச்சுக்காரர்களே. அத்தகைய வாயாடிகளைக் கட்சி உறுப்பினர் (அதாவது தொழிலாளி வர்க்க இராணுவத்தின் தலைவர்) என்று சொல்வது அப்பழுக்கற்ற தன்மைக்கு மாசு விளைவிப்பதாகும்.”

மேலும் முன்னெடுக்கும் கொள்கையில் முரணற்று இருக்க வேண்டுமென்று நினைத்தவர் “கொள்கையில் தவறிழைக்காமல் இருக்கவேண்டுமென்றால், நமது பார்வை முன்னோக்கியவாறு இருக்க வேண்டும். பின்னோக்கியதாகவாறு இருக்கக் கூடாது.” என்றார்.

பாட்டாளி வர்க்க கட்சி போராளிகள் குறைந்த அளவில் இருப்பினும் பொதுமக்களாக விளங்கும் பாட்டாளி வர்க்கத்தினரை விட அவர்கள் கூரிய பார்வை கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணினார் தோழர் ஸ்டாலின். “பாட்டாளி வர்க்கத்தை விட பாட்டாளி வர்க்க கட்சி கணிசமான அளவு சிறியதாகவே இருக்கும். ஆனால் புரிதலிலும் அனுபவத்திலும் பாட்டாளி வர்க்க கட்சியானது, பாட்டாளி வர்க்கத்தை விட சிறந்து விளங்கவேண்டும். பாட்டாளி வர்க்க கட்சி கட்டுக்கோப்பானதாக இருத்தல் வேண்டும்.” என்று கூறி போராளிகளின் கடைமையை எடுத்துரைத்தார்.

இவ்வாறு ஒரு அமைப்பின் அடிநாதத்தை பற்றி தெளிவான பார்வை கொண்டவராக இருந்ததால்தான் சோவியத் ரஷ்யாவை ஏகாதிபதிய வல்லுறுகளின் பார்வையில் இருந்து அவரால் காக்க முடிந்திருந்தது. கட்சியும், கட்சியின் சிந்ததாந்தமுமே முக்கியம், தனிநபரல்ல என்பதை உணர்த்திய புரட்சியாளர் தோழர் ஸ்டாலின் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் செவ்வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply