‘சுயமரியாதை சூரியன்’, ‘பகுத்தறிவு பகலவன்’ ஐயா தந்தை பெரியார் அவர்களின் 48 ம் ஆண்டு நினைவுநாள் (24-12-1973)

‘சுயமரியாதை சூரியன்’, ‘பகுத்தறிவு பகலவன்’ ஐயா தந்தை பெரியார் அவர்களின் 48 ம் ஆண்டு நினைவுநாள் (24-12-1973)

“மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு”

ஐயா தந்தை பெரியார் அவர்களின் இந்த வரிகள்தாம் அவர்தம் மொத்த வாழ்க்கையின் பாடமாக தமிழர்களுக்கு உணர்த்தியுள்ளது. ஆரிய சனாதன பார்ப்பனிய சமூக அடக்குமுறைக்கு எதிராக பெரியார் அவர்களின் போர் தமிழ்நாட்டின் ‘திராவிடர் எழுச்சியாகவும்’, தமிழர்களின் வாழ்வியலுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைக்கு அறைகூவல் விடுத்த ‘சமூகநீதிப் போராகவும்’ உருவெடுத்துள்ளது.

ஐயா தந்தை பெரியார் அவர்கள் முன்னெடுத்த சாதி பெயர்களை மறுக்கும் போராட்டம் இன்றளவும் இந்திய ஒன்றிய நிலப்பரப்பில் சாதி ஒழிப்பு போராட்டங்களில் முகாமையானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாதியின் தோற்றுவாயான வருணாசிரம கோட்பாடுகளையும், அதனை நடைமுறைப்படுத்தும் மனுதர்மம், பகவத்கீதை போன்ற இந்து மத நூல்களையும், ராமாயணம், மகாபாரதம் போன்ற புனைவுக் கதைகளையும் இப்பதிவுகள் மூலம் சாதியின் ஆணிவேராய் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் பார்ப்பனர்களையும் சரியாக அடையாளம் காட்டினார் ஐயா தந்தை பெரியார் அவர்கள்.

குறிப்பாக தமிழர்கள் தங்களை இந்தியர் என்று எண்ணுவதையும், இந்து என்று குறிப்பிடுவதையும் கடுமையாக விமர்சித்த பெரியார் 17-9-1939 ல் குடியரசு இதழில் கீழ்கண்டவாறு பதிவிட்டார்.

“தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.”

மேலும் இந்து மதப்புராணங்களை பெருமையாக பார்ப்பதைப் பற்றி “உலகம் இருபதாவது நூற்றாண்டில் இருக்கிறது. தமிழர்களாகிய நாம் பல நூற்றாண்டுகளுக்கு முந்திய நிலையில் இருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமானால் புராண காலத்திலும் பழைய தமிழ் இலக்கிய காலத்தில் இருக்கிறோம். சுருங்க சொல்ல வேண்டுமானால் காட்டுமிராண்டி காலத்தவர்களாகஇருக்கின்றோம்.” என்று குடியரசு 6-11-1943 ல் எழுதினார்.

சாதிதான் இச்சமுகத்தின் இழிநிலைக்கு முதன்மை காரணம் என்ற பெரியார் ‘சாதி விகிதப் பங்கீடு’ என்ற விகிதாசார இடஒதுக்கீடு உரிமையைக் கோரினார். அதிலும் 3% பார்ப்பனர் மற்றும் அவர்களால் சூத்திரர்களாக இழித்துக் கூறப்பட்ட 95% மக்களுக்குமான இடப்பங்கீடு பிரிவாகவே பேசினார்.

“1. இரண்டு சாதி மக்களுக்கும் சரிசமத்துவ விகிதத்தில் எல்லாப் படிப்பும் கிடைக்கும்படி செய்தல்
2. இரண்டு சாதி மக்களுக்கும் உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவைகளில் ஜனத்தொகை எண்ணிக்கை ஏற்ற விகிதப்படி, சாதிவாரி உரிமையாளித்து அந்தப்படி அந்தந்த சாதியை அமர்த்துதல்” என்று விடுதலை 13.12.1960 ல் எழுதினார்.

சாதி போன்றே பெண்ணடிமைத்தனத்தையும் கடுமையாக எதிர்த்த பெரியார் அவர்கள் “முதலாவதாக செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு என்று உறுதியாக கூறுவோம். ஒன்று இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களை பிறவிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து அவர்களை பகுத்தறிவற்ற, மிருகங்களிலும் கேவலமாக உணர்ச்சியற்ற புழு பூச்சிகளிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவது எதுவென்றால் பொதுவாக இந்திய பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதை அற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்க கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட அவர்கள் என்றும் கற்பித்து அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவது ஒழிக்கப்பட வேண்டியதாகும்.” என்று பகுத்தறிவு இதழில் 1938 ம் ஆண்டு எழுதினார்.

பெரியாரின் கருத்துக்களும், அவர் மதத்தின் மீது தொடுத்த கேள்விகளும் மக்களை அடக்குமுறையை நோக்கி கேள்விக் கேட்க தூண்டியது.

“மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப் படுத்துவதற்காக? பிரித்து வைப்பதற்காக? அது ஒரு மனிதனின் மனசாட்சிக்கு கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனசாட்சியை கட்டுப்படுத்தக்கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவற்றை தயவு செய்து யோசித்துப் பாருங்கள். (குடியரசு 11.9.1927)”

என்றும்,

“உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால் முதல் தொண்டாக கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால் தானே அவன் உண்மையான யோக்கியமான அறிவாளியான தொண்டனாக இருக்க முடியும்? (நூல் :கடவுள் ஒரு கற்பனையே – 1971)”

என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிலும் குறிப்பாக சாதிய முரண்களின் தொகுப்பாக இருக்கும் இந்து மதத்தினை பற்றி குறிப்பிடும்போது,

“மக்கள் ‘கஞ்சி கஞ்சி’ என்று கதறி மடியும் போது கோயில் கட்டுவதும், கல்லின் தலையில் அரும்பொருட்களை கொட்டி வீணாக்குவதும், உற்சவம் நடத்துவதும், மத பிரதிநிதிகளை பல்லக்கில் வைத்து பிணத்தை சுமப்பது போல் சுமந்து திரிவது அறிவு குன்றியவர்கள் செய்யக்கூடிய காரியங்கள் (குடியரசு 15.10.1949)”

என்றார். இந்து மதத்தில் சாதிப் பிரிவினைகளே இல்லை என்பவரை “இந்து மத சம்பிரதாயப்படி சாதி இல்லை என்று உங்களிடம் யார் சொல்ல வந்தாலும் அவர்களை மூடர்கள் என்றோ மோசக்காரர்கள் என்றோதான் நீங்கள் கருத வேண்டும். (குடியரசு – 11.1.1931)” என்று சாடினார்.

இவ்வாறு தன் இறுதி மூச்சுவரை அனைத்து சமூக அடக்குமுறைக்கும் எதிராக சமூகப்புரட்சி செய்த ஐயா தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply