கொல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய கோரிக்கை! சனநாயக ஆற்றல்கள் ஆதரவளிக்க முன்வர வேண்டும்!

கொல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய கோரிக்கை! சனநாயக ஆற்றல்கள் ஆதரவளிக்க முன்வர வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உடல், மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கடும் போராட்டம் காரணமாக உடனடியாக கொண்டுவரப்பட்டது. ஆனால், குடும்பத்தினருக்கு முகத்தை கூட காட்டாமல் அவசர அவசரமாக உடல் புதைக்கப்பட்டது. அப்போது உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதன் தொடர்ச்சியாக, புதைக்கப்பட்ட உடலை எடுத்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டுமென தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகியோர் கடந்த மாதம் 18-ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி படகு மீது கப்பலை மோதவிட்டு படகை மூழ்கடித்தனர். இதில் ராஜ்கிரண் கொல்லப்பட, மற்ற இருவரை இலங்கை கடற்படை கைது செய்து கொண்டு சென்றது. இச்செய்தி தெரிந்தவுடன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் ஆகியோர் கோட்டைப்பட்டினம் சென்று, மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, ராஜ்கிரண் உடலை திரும்பப் பெற போராடிய மக்களுக்கு உறுதுணையாக அவர்களுடன் போராடினர்.

அப்போது, ராஜ்கிரணின் இறந்த உடல் புகைப்படத்தில் காயங்களோடு இருந்ததால், ராஜ்கிரண் கொல்லப்பட்டுள்ளார் என்றும், இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று ஊர் மக்கள், மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட சனநாயக அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. தோழர் திருமுருகன் காந்தி மற்றும் இயக்கத் தோழர்களின் இரண்டு நாள் போராட்டத்தின் காரணமாக, ராஜ்கிரண் உடல் கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், கொல்லப்பட்ட மீனவரின் முகத்தை குடும்பத்தினரிடம் காட்டாமல், அடையாளம் உறுதிபடுத்தப்படாமல் அவசர அவசரமாக காவல்துறையினரால் புதைக்கப்பட்டது.

இலங்கை அரசின் உடற்கூராய்வு அறிக்கையை ஏற்காமல், உடலை மறு உடற்கூராய்வு செய்வதன் மூலம் மட்டுமே ராஜ்கிரண் கொல்லப்பட்டதை உறுதி செய்ய முடியுமென்று மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட சனநாயக அமைப்புகள் கருதின. அதன்படி, ஒப்படைக்கப்பட்டது உனமையிலேயே ராஜ்கிரண் உடல் தான் என்பதை உறுதிபடுத்தவும், அவர் இலங்கை கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்யவும், தமிழ்நாடு அரசு ராஜ்கிரண் உடலை மறு உடற்கூறாய்வு செய்யும் கோரிக்கையை முன்னெடுக்க அவரது குடும்பத்தினரோடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, தன் கணவரின் உடலை தன்னிடம் காண்பிக்காமல், குடும்பத்தினர் உறுதிபடுத்தாமல் அவசர அவசரமாக அரசே உடலை புதைத்துள்ளது, அந்த உடல் தன்னுடைய கணவர் உடல்தானா என்று சந்தேகம் எழுப்பியுள்ளது, எனவே புதைத்த உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர் ராஜ்கிரண் மனைவி பிருந்தா மற்றும் மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கையின் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மற்றொரு மனுவாக கிடப்பில் போடப்படாமல், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை சமூக அக்கறையுள்ள அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மீனவர் ராஜ்கிரண் கொல்லப்பட்டது உறுதிபடுத்தப்பட்டால் மட்டுமே அவரது குடும்பத்திற்கான நீதியை பெற்றுத் தர முடியும். அதோடு, தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தவும் இது துவக்கப்புள்ளியாக அமையும். எனவே, சனநாயக, முற்போக்கு ஆற்றல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, ராஜ்கிரண் குடும்பத்தினரின் நியாயமான கோரிக்கைக்கு வலு சேர்க்க வேண்டுமெனவும், தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க அணியமாக வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply