தமிழ்நாடு அரசே! தொழிற்சாலைகளை இயக்குவதற்கான புதுப்பித்தல் இசைவாணை வழங்கும் புதிய அரசாணையை உடனடியாக திரும்பப் பெறு!

தமிழ்நாடு அரசே! தொழிற்சாலைகளை இயக்குவதற்கான புதுப்பித்தல் இசைவாணை வழங்கும் புதிய அரசாணையை உடனடியாக திரும்பப் பெறு! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் (Consent to Operate – CTO) புதுப்பித்தலுக்குமான (Renewal of Consent – RCO) இசைவாணையை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதற்கு பதிலாக அதன் கால நீட்டித்து தொகுப்பாக வழங்கப்படும் என்று ஓர் அரசாணையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமரசம் செய்யக் கூடும் என்று மே பதினேழு இயக்கம் அஞ்சுகிறது. அந்த வகையில் இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், இலகுவாக தொழில் நடத்துவதற்கு ஏதுவாக தொழிற்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று கடந்த செப்டம்பர் 13 அன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தொழிற்சாலைகளை இயக்குவதற்கும், புதுப்பித்தலுக்கும் ஆண்டுதோறும் இசைவாணை வழங்கும் முறையை மாற்றி, 5-10 ஆண்டுகள் என மொத்தமாக காலநீட்டிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் அதன் மாசுக் குறியீட்டின் அடிப்படையில், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணையின் படி, சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளுக்கும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், பச்சை வகை தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளுக்கும் செல்லத்தக்க வகையில் தொழிற்சாலையை இயக்குவதற்கு (CTO) இசைவாணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான மொத்த கட்டணத்தையும் செலுத்தும் பட்சத்தில் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது இயக்குவதற்கான இசைவாணை காலம் முடியும் வரை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது இந்த அரசாணை.

ஆண்டுதோறும், இல்லை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு புதுப்பித்தலுக்கான இசைவாணை வழங்கி வந்ததன் மூலம் தொழிற்சாலைகள் முறையாக பராமரிப்பு மேற்கொண்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுக்குள் வைக்க அனுமதித்ததோடு, தொழிற்சாலைகளில் மோசமான விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுத்து வந்தன. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி தொழிற்சாலைகள் புதிப்பித்தலுக்கு ஐந்து, பத்து மற்றும் பதினான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுமானால், மாசுகட்டுப்பாட்டை தடுக்க தவறுவதோடு, முறையான பாராமரிப்பின்றி விபத்துகள் ஏற்படும் சூழல் உண்டாகும் நிலை ஏற்படும்.

உலகம் காலநிலை மாற்றத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டு அதனை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் காலநிலையை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்படுத்தக்கூடும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெள்ளத்தையும், வறட்சியையும், காட்டுத்தீயையும் முன்னேறிய நாடுகளே கையாள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் இந்திய ஒன்றிய அரசின் தயவை நாடும் தமிழ்நாடு அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிவிப்பின் மூலம் ஏற்படும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு கையாள முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்கம் வரைவு அறிக்கையில், சுற்றுச்சூழல் கண்காணிப்பு நடைமுறைகளில் சமரசம் செய்துகொள்ளும் வகையில் பல்வேறு கொள்கைகள் இடம்பெற்றிருந்தன. இதனை மே பதினேழு இயக்கம், திமுக உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. தற்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்கம் வரைவு அறிக்கை சாயலிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவை.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய ஒன்றிய அரசின் திட்டங்கள் பல மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய பாதிப்பு மிக மோசமானது. இது 2018-இல் ஸ்டெர்லைட் நிர்வாகம் புதுப்பித்தலுக்கான இசைவாணை பெற முயற்சிக்கும் போது தான் ஸ்டெர்லைட் மேற்கொண்ட முறைகேடுகள் தெரியவந்து புதுப்பித்தல் இசைவாணை மறுக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை தடுக்கிறது. எனவே, இந்த அரசாணை எத்தகைய மோசமானது என்பதை இதன் மூலம் புரிந்துக்கொள்ள முடியும்.

தமிழ்நாடு அரசு பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள தொழில் கொள்கையில் மேற்கொள்ளும் இந்த மாற்றங்கள், ஏற்கனவே மோசமாக உள்ள தொழிற்சாலை கழிவு மேலாண்மையை இன்னும் மோசமாக்கக் கூடும். ஊழல் நிறைந்த இந்த தொழில்துறையில், அதிகாரிகள் செயல்பாட்டை மேலும் குறைப்பதோடு, தொழிற்சாலைகள் அதிக அதிகாரம் பெறும் நிலையை உருவாக்கும். இது ஒரு நிலையில் அரசினால் கட்டுப்படுத்த முடியாத சூழலை உண்டாக்கக் கூடும். தற்போது வடசென்னை தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதே சிறந்த எடுத்துக்காட்டு.

இலாபநோக்கின் அடிப்படையில் இயங்கும் இந்த தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் மீது அக்கரையற்று அனுமதிப்பது சாமானிய மக்களின் உரிமைகளை சமரசம் செய்வதற்கு சமமானது. அப்படியாக சாமானிய மக்கள், சூழலியல் மீது பாதிப்பை ஏற்படுத்த அனுமதிப்பது எவ்வகையிலும் சனநாயக நடவடிக்கையாகாது. மாறாக இதை மக்கள் விரோத நடவடிக்கையாகவே பார்க்க இயலும். சிதைவுறும் இயற்கையை எவ்வகையிலும் சீரமைக்க இயலாத வகையில் சீரழிக்கும் உற்பத்தி வழிமுறைகள் மீதான கட்டுப்பாடு நீங்குதல் என்பது பெருநிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறையே. இதை எவ்வகையிலும் அனுமதிக்க இயலாத நிலையை தமிழ்நாடு அரசு கொள்கையளவில் உறுதியேற்பதே எதிர்காலத்திற்கு உகந்தது.

எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இந்த தொழிற்கொள்கை உண்டாக்கக் கூடிய தாக்கத்தை மதிப்பீடு செய்யவும், நடைமுறையில் உள்ள கொள்கைகளை மறு சீராய்வு செய்யவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்களை கொண்ட குழு ஒன்றை அமைத்து ஆய்வு மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்கம் வரைவு அறிக்கை, தமிழ்நாட்டின் தொழிற்கொள்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. காலநிலை மாற்றம் தமிழ்நாட்டை எவ்வகையில் பாதிக்கக்கூடும் என்பதை ஆராய்ந்து, அதனடிப்படையில் புதியதொரு தொழிற்கொள்கையை உருவாக்கி, இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே முன்னோடியாக திகழ வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம
9884864010

Leave a Reply