அண்ணல் அம்பேத்கர் இந்து மத இழிவிலிருந்து வெளியேறிய நாள் – 14-10-1956

அண்ணல் அம்பேத்கர் இந்து மத இழிவிலிருந்து வெளியேறிய நாள் – 14-10-1956

இந்திய ஒன்றியத்தில் இந்துத்துவ கொடுங்கோன்மையை எதிர்த்து இந்து மதத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த இரு மாபெரும் தலைவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஆவர். இந்திய ஒன்றியத்தின் வடபகுதியில் சாதிய தீண்டாமைக்கும், தீண்டாமையை காத்து நிற்கும் இந்துத்துவத்திற்கும் எதிராக புரட்சி செய்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இறுதியாக இந்து மதத்தில் இருக்கும் வரை இத்தகைய தீண்டாமை கொடுமைகள் தீராது என்று முடிவு எடுத்து, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தீக்சாபூமியில் 1956-ஆம் ஆண்டு புத்த மதத்தை தழுவினார். இந்நிகழ்வின் போது அவரோடு பட்டியல் சமூக மக்கள் ஏறத்தாழ 10 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறினர்.

இந்து மதத்தின் மொத்த சாதியக் கட்டமைப்பின் அழுத்தமும் அதன் அடி நிலையில் வைக்கப்பட்டுள்ள சூத்திரர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் மீதுதான் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்து மத சட்டமானது யார் எப்படி வாழவேண்டும் என்பதை விட, சூத்திரர்களுக்கும் அவர்களுக்கு கீழே வைக்கப்படும் பஞ்சமர் முதலிய வருண கட்டமைப்புக்குள் வராத அவர்ணர்கள் என்று குறிப்பிடப்பட்ட பட்டியல் சமூக மக்களுக்கும் எத்தகைய உரிமைகள் வழங்கப்படக் கூடாது என்பதையே வலியுறுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்வி உரிமை, சொத்துரிமை, திருமண உரிமை, மதம் சார்ந்த வழிபாட்டு உரிமை, பொது வெளியில் நடமாடும் உரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே நாம் இருந்து வருகிறோம்.

இதை அண்ணல் குறிப்பிடும் போது “சமூக வாழ்வில் உறுப்பினர்களுக்கு இடையே உள்ள உறவுகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும்” என்கிறார். ஆனால் இந்து மத வர்ணாசிரம அடிப்படைவாத சமூகத்தில் இத்தகைய உயரிய கோட்பாடுகள் எதற்கும் இடமில்லை என்பதை மீண்டும் மீண்டும் தனது எழுத்துக்களில் வலியுறுத்துகிறார்.

“சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்து சமூகம் அமைந்திருக்கவில்லை. பின் எத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையில் இந்துமதம் அமைந்திருக்கிறது? இந்த வினாவிற்கு ஒரு விடை தான் கூற முடியும். அது வரிசைப்படுத்தப்பட்ட சமமின்மை கோட்பாடாகும்”

இத்தகைய இந்துமத தீண்டாமைக் கொடுமையை நன்கு புரிந்து கொண்ட காரணத்தினால் இம்மதத்தில் இருக்கும் வரை சாதி தீண்டாமை ஏதாவது ஒரு வடிவத்தில் மக்களை சூழ்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்த மத மாற்றம் இன்று வரையிலும் இந்துமதத்தின் சனாதன கட்டமைப்பிற்கு விழுந்த மாபெரும் அடியாகவும், இந்துமத சாதிக் கட்டமைப்பையும், அதன் வலியையும் உணர்த்தும் நிகழ்வாகவும் வரலாற்றில் சமூகவியலாளர்களால் பார்க்கப்படுகிறது.

எந்த சனாதன சக்திகளை எதிர்த்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அந்த சக்திகள் அவரை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கின்றன. அத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பை மனதில் ஏற்று, சனாதன சக்திகளை வீழ்த்துவோம். சாதியற்ற சமத்துவ சமூகத்தை படைப்போம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply