தமிழகத்தையே உலுக்கிய கண்ணகி முருகேசன் வழக்கின் தீர்ப்பு: சாதிய ஆணவ கொலைகளை தடுக்க உடனடியாக தனிச்சட்டம் இயற்றுக!

தமிழகத்தையே உலுக்கிய கண்ணகி முருகேசன் வழக்கின் தீர்ப்பு: சாதிய ஆணவ கொலைகளை தடுக்க உடனடியாக தனிச்சட்டம் இயற்றுக! – மே பதினேழு இயக்கம்

தமிழகத்தையே பதற வைத்த கண்ணகி முருகேசன் சாதி ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு நேற்று கடலூர் சிறப்பு நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்த கண்ணகி முருகேசன் என்ற இருவர் சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்காக கண்ணகியின் உறவினர்கள் தம்பதியினர் இருவரையும் காது வழியாகவும் மூக்கின் வழியாகவும் விஷம் கொடுத்து சாதி ஆணவக்கொலை செய்து எரித்தனர்.

அந்த கொலை சம்பந்தமாக முருகேசனின் உறவினர்கள் விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அப்போதிருந்த காவல்துறை அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்காமலும், மேலும் இந்த கொலையை மறைக்கும் விதமாகவும் செயல்பட்டார்கள். இதனை தமிழகத்தில் இருக்கிற பல்வேறு அமைப்புகள் கண்டித்தனர். இதன் விளைவாக இந்த வழக்கு 2004-ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டே சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை, அண்ணன், உடந்தையாக காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி என்றாலும், அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அதன் பின்னரான பல ஆணவ கொலைகள் தடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு. இனியாவது தாமதிக்காமல் இதுபோன்ற ஆணவக்கொலை தடுப்பதற்காக தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் அதுவே ஆணவக் கொலைகளை இனி நடக்காமல் தடுக்க வழி வகை செய்யும் என்று மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply