குடியரசுத் தலைவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தோழர்களை முன்னெச்சரிக்கை கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது!

குடியரசுத் தலைவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தோழர்களை முன்னெச்சரிக்கை கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது! – மே பதினேழு இயக்கம்

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லை என்று ஏழு தமிழர் விடுதலையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் தமிழ்நாட்டு ஆளுநருக்கு, குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று, இன்று (02-08-2021) தமிழ்நாட்டுக்கு வருகை தரும் குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவே தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த தோழர்களை தமிழ்நாடு முழுவதும் காவல்துறை முன்னெச்சரிக்கையாக கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஏழு தமிழர்களை விடுவிக்க தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கடந்த 2018-ம் ஆண்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அரசியலமைப்பிற்கு எதிராக சட்டமன்ற தீர்மானத்தை கிடப்பில் போட்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் சட்டப்போராட்டம் காரணமாக, ஏழு தமிழர்களை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக கூறினார். அதன்பின்பும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் குடியரசுத் தலைவர் அமைதிகாத்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தரும் இந்திய குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்னெடுத்தது.

ஆனால், கருப்பு கொடி காட்டும் ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்த பல்வேறு தோழர்களை தமிழ்நாடு காவல்துறை முன்னெச்சரிக்கையாக நேற்று இரவு முதல் தமிழ்நாடு முழுவதும் கைது செய்து, பல்வேறு வழக்குகளின் கீழ் சிறைப்படுத்தி வருகிறது. காந்தி, மாரிமுத்து, கருப்பையா, செல்வராசு மேலூர் சிறையிலும், பிரான்மலை கர்ணன், இளையவன் சிவகங்கை சிறையிலும் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். மேலும், திருவண்ணாமலை கண்ணதாசன் உள்ளிட்ட ஏழு தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் .புதுக்கோட்டை இராமசாமி, சிவகங்கை இளஞ்சென்னியன் என இருவர் சைதை விடுதியில் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதைபோல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தமிழ்த்தேசிய, மனித உரிமை செயற்பாட்டாளர்களை காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைத்துள்ளது.

காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. தமிழ்நாடு அரசின் சட்டமன்ற தீர்மானத்தை ஏற்க குடியரசுத் தலைவரை ஜனநாயக முறையில் வலியுறுத்த முயன்றதை காவல்துறை தடுப்பது, தமிழ்நாடு சட்டமன்ற முடிவுக்கு முரணான செயலாகும். தற்போதைய திமுக அரசும் எழுவர் விடுதலையில் உறுதியாக உள்ளதாக கூறி அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய சட்டமன்ற தீர்மானத்தை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில உரிமைகளை மீட்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மாநில உரிமையை நிலைநாட்ட குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், கருப்புக் கொடி காட்டுவது என்பது எதிர்ப்பை காட்டும் ஜனநாயக வழிமுறைகளில் ஒன்றாகும். அதனை மறுப்பது ஜனநாயக விரோதமானது என்பதை அரசு உணர வேண்டும்,.

ஆகவே, குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தோழர்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட பல்வேறு தமிழுணர்வாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக இரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், எழுவர் விடுதலை தொடர்பாக திமுக அரசு உடனடியாக செயலாற்றி அவர்களை விடுவிக்க ஆளுநரை வலியுறுத்த வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply