சாதியற்ற தமிழ்த்தேசியத்திற்காக போராடிய புலவர் ஐயா கலியபெருமாள் அவர்களின் நினைவை போற்றுவோம்!

சாதியற்ற தமிழ்த்தேசியத்திற்காக போராடிய புலவர் ஐயா கலியபெருமாள் அவர்களின் நினைவை போற்றுவோம்! – மே பதினேழு இயக்கம்

உற்றதாய் மண்மிசை ஒடுக்குமுறைகள்
உடைந்து துகள்பட வந்தான்!
கற்றவன் புலவர் கலிய பெருமாள்
கண்துயிலாத போராளி!

கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கூறிய இந்த வரிகள் தமிழ்நாட்டின் புரட்சிகர அரசியலை முன்னெடுத்து, தமிழ் தேசிய அரசியல் வழியில் கொள்கை வகுத்து, தனி ஈழம், தனித்தமிழ்நாடு கோரிக்கைகளை வலியுறுத்தியவரும், ‘புலவர்’ என்று தமிழக அரசியல் களத்தில் மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ஐயா திரு கலியபெருமாள் அவர்களைப் பற்றிய வரிகளாகும்.

சாதிய, வர்க்க முரண்பாடுகள் அதிகம் மிகுந்த மாவட்டமாக தமிழ்நாட்டில் விளங்கிய கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் பகுதியில் வசித்து வந்த புலவர் பெரியாரின் கொள்கைகளை ஏற்று அவருடைய சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, சாதி ஒழிப்பு அரசியலில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். தோழர் கோவை ஈஸ்வரன் அவர்கள் புலவர் அரசியல் வாழ்க்கை தொடங்கிய புள்ளியை பற்றி கூறும் பொழுது, ‘திருவையாறு கல்லூரியில் புலவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பெரியாரின் பகுத்தறிவு பயிற்சி பெற்று கருஞ்சட்டைகாரர் ஆகி சாதி ஆதிக்கத்தை எதிர்த்து போராடத் தொடங்கினார்’ என்று குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாது 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 15 நாள் சிறை தண்டனையை அனுபவித்தார்.

அவர் வாழ்ந்திருந்த பெண்ணாடம் பகுதியில் நிலவி வந்த இரட்டைக் குவளை முறை, முடிதிருத்தும் கடைகளில் நிலவிவந்த தீண்டாமை போன்ற சமூக அவலங்களை எதிர்த்து களம் கண்டவர் புலவர் ஐயா கலியபெருமாள் அவர்கள். காலப்போக்கில் மார்க்சிய லெனினிய இயக்கங்களின் புரட்சிகர பாதையை தேர்ந்தெடுத்த புலவர் அவர்கள், ஒரு பொய் வழக்கில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட வரலாறு இதுவரை தமிழ்நாட்டில் வேறு எந்த புரட்சிகர இயக்கவாதிகள் நடந்திருக்க முடியாது வரலாறாகும். காரணம் திரு புலவர் மட்டுமல்லாமல் அவருடைய இரு புதல்வர்கள், அவருடைய இணையர் மற்றும் பல உறவினர்கள் உட்பட பல்வேறு குடும்ப உறுப்பினர்களை இதுபோன்ற பொய் வழக்குகளில் அரசு சிறையில் இட்டது. அதிலும் பலருக்கு தூக்கு தண்டனையும், மீதம் இருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் என்கின்ற அளவில் மிகக் கடுமையான அடக்குமுறையை கையாண்டது. பல்வேறு மக்கள் போராட்டங்களின் விளைவாகவும், தொடர்ச்சியான இயக்கங்களின் கோரிக்கை விளைவாகவும் பின்பு இத்தண்டனைகள் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் பல கொடுமைகளுக்கு உள்ளானவர் புலவர் கலியபெருமாள் அவர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர். சிறையில் இருந்த போதும் தன் விடுதலைக்காக அரசிடம் கையேந்தி நிற்காமல், சிறை பிற கைதிகளின் உரிமைக்காக சிறை நிர்வாகத்திடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதன் விளைவாக சிறையில் மிக மோசமான காவல்துறை தாக்குதல்களுக்கு உள்ளாகி அவர் அவர்.

சிறையில் இருந்தபோது தமிழீழ தேசியத் தலைவர் வே பிரபாகரன் அவர்களின் அறிமுகம் ஐயா புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு கிட்டியது. அந்த சந்திப்பில் இருந்து ஈழ விடுதலைக்கு முழுமையான ஆதரவாளராக இருந்த ஐயா கலியபெருமாள் அவர்கள், சிறையிலிருந்து நிபந்தனையற்ற நீண்டகால பிணையில் விடுவிக்கப்பட்ட பின்பு 1985ஆம் ஆண்டு பெண்ணாடம் பகுதியில் ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். பின்பு தோழர் தமிழரசன் அவர்களுடன் இணைந்து தமிழ்நாடு விடுதலைப் படையை உருவாக்குகிறார்.

புலவர் ஐயா திரு கலியபெருமாள் அவர்களின் கனவு சாதியற்ற தமிழ் தேசிய அரசியலாக இருந்தது. அதன் அடிப்படையில்தான் தோழர் தமிழரசனோடும், தேசியத் தலைவர் பிரபாகரனோடும் அவரால் கொள்கையில் ஒன்றிப் போக முடிந்தது. பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் சாதியற்ற தமிழ்தேசிய கருத்தியலை ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஏனென்றால் சாதிய அமைப்பு இருக்கும் வரை நம்மால் தமிழ்த்தேசிய அரசியலை ஏட்டளவில் கூட கையில் எடுக்க முடியாது என்பதுதான் புலவர் ஐயா திரு கலியபெருமாள் அவர்கள் போன்ற எண்ணற்ற தமிழ்தேசியவாதிகள் இங்கு எடுத்துக் காட்டியிருக்கும் உண்மையாகும்.

தன் இறுதி மூச்சுவரை சாதியற்ற தமிழ் தேசியத்திற்காக போராடி வந்த புலவர் ஐயா திரு கலியபெருமாள் அவர்களின் நினைவு நாளான இன்று (16-05-2021) மே பதினேழு இயக்கம் அவரது நினைவை போற்றி வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply