சேலம் உருக்காலையின் ஆக்சிசன் உற்பத்தியை உடனே மக்களுக்கு கொடு!

சேலம் உருக்காலையின் ஆக்சிசன் உற்பத்தியை உடனே மக்களுக்கு கொடு! – மே பதினேழு இயக்கம்

வட இந்தியாவில் நிலவி வரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் இறந்துவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்திருந்தும் தமிழ்நாடு அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றே தெரியவருகிறது. அல்லது, ஆக்ஸிஜன் தேவையை சந்திப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை எனலாம். இந்நிலையில் சேலம் இரும்பு உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்றி, அதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் மீண்டும் கோரிக்கை வைக்கிறது.

சேலம் இரும்பு உருக்காலையின் ஆக்ஸிஜன் உற்பத்தி குறித்தும், அதனை மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்குவது குறித்தும் கடந்த ஏப்ரல் 26 அன்று மே பதினேழு இயக்கம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு இதுவரை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் இரவிக்குமார் மேற்கொண்ட முயற்சியில், சேலம் இரும்பு உருக்காலையில் 108 மெட்ரிக் டன் தொழிற்சாலைக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதனை மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்றும் வசதி அங்கு இல்லை என்றும் தெரிய வருகிறது. சேலம் உருக்காலை குறித்து தோழர் ரவிக்குமார் கேள்வி எழுப்பியத நன்றியை தெரிவிக்கிறோம்.

ஆக்ஸிஜன் தேவையை உணர்ந்திருந்தும், சேலம் இரும்பு உருக்காலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்றும் வசதியை உருவாக்கி, அந்த ஆக்சிஜனை பயன்படுத்திக்கொள்ள எந்த முயற்சியையும் ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் மேற்கொள்ளாதது அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆக்சிஜனை உடனே மக்கள் தேவைக்கு எற்பாடு செய்ய கோருகிறோம். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நெருக்கடி வளர்ந்து வரும் நிலையில் இதை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 65 மெட்ரிக் டன் வரை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசிடம்’கலந்தாலோசிக்காமலே மோடி அரசு திருப்பி அனுப்பியது. இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளிப்படையாக அதிருப்தியை தெரிவித்தது. பின்னர் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று நீதிமன்றத்தில் கூறியது. மருத்துவ நிபுணர்கள் எச்சரித்த பின்பும், சேலம் இரும்பு உருக்காலை, திருச்சி, ராணிபேட்டை BHEL நிறுவனங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி குறித்த கேள்வி எழுப்பிய பின்னரும் ஒன்றிய, மாநில அரசுகள் இன்று வரை நடவடிக்கை எடுக்காதது, தமிழ்நாடு மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தான் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தீரும் என்ற பிம்பத்தை மோடி அரசும், எடப்பாடி அரசும் உருவாக்கி, இன்று ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்கவும் அனுமதித்துவிட்டனர். 9 நாட்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று ஸ்டெர்லைட் ஆலை கூறிய நிலையில், இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது குறித்து யாரும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு காட்டிய ஆர்வத்தை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பயன்படுத்திக்கொள்ள ஏன் காட்டவில்லை என்ற கேள்வியை மே பதினேழு இயக்கம் எழுப்புகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதையும், தட்டுப்பாடு நிலவுவதையும் தமிழ்நாடு அரசு உணர்ந்துகொண்டு, மக்களின் சந்தேகங்கள் தீரும் வகையில் வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது, மருத்துவமனைகள் தோறும் கையிருப்பில் உள்ள ஆக்ஸிஜன் அளவை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், மக்கள் தங்கள் தேவையை அரசிடம் தெரிவிக்கும் வகையிலும், அதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் அறிந்தும்கொள்ளும் வகையில் பொதுத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

சேலம் இரும்பு உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவப் பயன்பாட்டிற்கு மாற்றும் வசதியை உடனடியாக உருவாக்கி, அதனை தமிழ்நாடு மக்களுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. சேலம் உருக்காலை ஆக்ஸிஜன் போன்ற தொழிற்சாலைகள் மூலம் தமிழ்நாட்டின் ஆக்ஸிஜன் தேவை பூர்த்தி செய்யப்படுமெனில், ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஆக்சிஜனை காட்டி கொல்லைப்புறமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சியை உணர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply