திராவிட சித்தாந்தத்தின் முன்னோடி ஐயா அயோத்திதாச பண்டிதர் அவர்களின் நினைவுநாளில் வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!

திராவிட சித்தாந்தத்தின் முன்னோடி ஐயா அயோத்திதாச பண்டிதர் அவர்களின் நினைவுநாளில் (05-05-1914) வீரவணக்கத்தை செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துக்களும் முன்னோடிகளாக இருப்பவர்கள் அயோத்திதாச பண்டிதரும், அப்பாதுரையாரும் தான்”

இது தந்தை பெரியார் தனது 68வது பிறந்த நாளில் கூறிய வரிகள். இந்த வரிகள் ஏதோ மிகைப்படுத்தப்பட்டு தனக்கு முன்னால் சமூகத்தில் இயங்கிய ஒரு சமூக சீர்திருத்தவாதி பற்றி பேச வேண்டுமே என்று பேசிய வரிகள் அல்ல என்பதை அயோத்திதாசரை பற்றி படிக்கும்போது புரிந்து கொள்ளலாம். திராவிட கருத்தியலின் முன்னோடி என்றும், சாதி ஒழிப்பு போராளியாகவும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு முதன் முதலில் குரல் கொடுத்தவர் என்றும் போற்றப்படுபவர் ஐயா அயோத்திதாச பண்டிதர்.

தமிழர்களின் பெரும் சொத்தான திருக்குறள் வெளிவருவதற்கு காரணமாயிருந்த திரு எல்லீஸ் அவர்களிடம் அதற்கான முதல் ஓலைப்படியை கொடுத்த திரு கந்தப்பன் அவர்களின் பேரனான ஐயா அயோத்திதாசர் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழியில் பெரும்புலமை வாய்ந்தவராக இருந்தார். எனவே ஆரிய வேதங்களையும், புராணங்களையும் நன்கு கற்றறிந்தவராய் திகழ்ந்தார். இந்து என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தது மட்டுமில்லாமல் “இந்து என்ற அடையாளத்தை ஏற்றால் அதன் மீது கட்டப்பட்டிருக்கும் சாதிய கட்டமைப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்” என்று அறிவித்தார்.

ஐயா அயோத்திதாச பண்டிதரின் முயற்சியால் 1891 ஆம் ஆண்டு “திராவிட மகாஜன சபை” எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன்மூலம் தீண்டத்தகாதவர்கள் என இந்து மத கோட்பாட்டால் விலக்கி வைக்கப்பட்டவர்களை “சாதியற்ற திராவிடர்கள்”, “சாதியற்ற தமிழர்கள்” அல்லது “ஆதிதிராவிடர்கள்” என்று முன் நிறுத்தினார். இதன் மூலம் திராவிட அரசியலின் முன்னோடி என்று பெருமைப் படுத்தப்படுகிறார்.

ஐயா அயோத்திதாசப் பண்டிதர் “திராவிட பாண்டியன்” என்ற இதழையும் “ஒரு பைசா தமிழன்” என்ற இதழையும் நடத்தி, அவைகளின் வழியே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமையையும், சாதி ஒழிப்பின் அவசியத்தையும் சமூகத்திற்கு எடுத்துவைத்து கொண்டிருந்தார். “ஒரு பைசா தமிழன்” என்ற பத்திரிக்கை சிறிது காலம் கழித்து “தமிழன்” என் பெயர் மாற்றம் பெற்றது.

தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காக இட ஒதுக்கீடு குரலை முதலில் எழுப்பிய வரும் அயோத்திதாச பண்டிதரே. 1895 முதல் 1907 வரை ஆங்கில அரசு நிர்வாகத்துடன் பலமுறை முறையிட்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்க்கான இட ஒதுக்கீட்டை தொடங்கி வைத்தார்.

இன்றளவும் பெரியாரை குறை பேசுகின்றவர்கள் அயோத்திதாசரை பற்றி பெரியார் பேசுவதில்லை என்றெல்லாம் கூறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பல நூல்களை மலிவு விலையில் பதிப்பித்து தமிழ் பேசும் நல்லுலகம் அறியச் செய்தவர் தந்தை பெரியார் என்பதை நினைவு கூறுவதே அதற்கான பதிலாக இருக்கும்.

இப்படி சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, மற்றும் இந்து மத எதிர்ப்பின் முன்னோடியாய் திகழ்ந்த ஐயா அயோத்திதாச பண்டிதரின் நினைவு நாளான இன்று (05-05-2021) மே பதினேழு இயக்கம் அவருக்கு தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply