புரட்சியாளர் லெனின் அவர்களின் 151வது பிறந்தநாள் (22.04.1870)

புரட்சியாளர் லெனின் அவர்களின் 151வது பிறந்தநாள் (22.04.1870)

“புரட்சிப் பாதையில்
கை துப்பாக்கிகளை விட
பெரிய ஆயுதங்கள்
புத்தகங்களே..!”

இவை புரட்சியாளர் லெனின் அவர்களின் ஒரு புகழ்பெற்ற வரிகள். ஆம், மாபெரும் செம்படை கட்டி சோவியத் ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் சர்வதிகார ஆட்சியை வீழ்த்தி காட்டிய தோழர் லெனின் அவர்கள் ஆயுதங்களை விட அதிகமாக நம்பியது புத்தகங்களையே.

‘விளாதிமிர் உலியனொவ்’ என்ற இயற்பெயரைக் கொண்ட புரட்சியாளர் லெனின் அவர்கள் ரஷ்ய பொதுவுடமை கட்சியான போல்ஷ்விக் கட்சியின் தலைவராகவும், நவீன ரஷ்யாவின் தந்தையாகவும் இருந்தவர். 1917ம் ஆண்டு நடந்த ரஷ்ய புரட்சியைத் தலைமை தாங்கிய புரட்சியாளர்களின் அவர்கள் உலகின் மிகப்பெரிய பொதுவுடமை அரசு அமைத்த பெருமைக்குரியவர்.

புரட்சியாளர் லெனின் முன்வைத்த மார்க்சிய பொருளாதாரமானது இன்றளவிலும் உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார கோட்பாடாக இருந்து வருகிறது. இன்றும் நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுக்கும் அன்றே மார்க்சிய பொருள்முதல்வாத அடிப்படையிலான விடைகளை சொல்லிச் சென்றிருக்கிறார் புரட்சியாளர் லெனின் அவர்கள்.

இந்திய ஒன்றிய முதலாளித்துவ அரசின் சுரண்டலை தடுக்கக்கூடிய வகையிலான தமிழ் தேசிய அரசியலை முன் வைக்க தயங்கி, அண்டை தேசிய இனங்களை பகையாளிகள் காட்டிக் கொண்டிருக்கும் குழப்பவாதிகளுக்கு புரட்சியாளர் லெனின் அவர்கள் கூறிச் சென்றுள்ள விடை அதை விளக்குகிறது. வர்க்க விடுதலையை முன்வைக்காத தேசிய இன விடுதலை மீண்டும் முதலாளித்துவ அரசிற்கு ஆதரவாக சென்று முடியும் என்று தெளிவாக கூறுகிறார்.

“ஒவ்வொரு தேசிய இனத்திலும் உழைப்பவரும், சுரண்டப்படுபவருமான வர்க்கத்தினர் இருக்கவே செய்கின்றனர். அவர்களின் வர்க்க விடுதலையை பற்றியோ, எந்த வர்க்கத்தின் நுகத்தடி கீழ் அவர்கள் நசுக்கப் படுகிறார்கள் என்பது பற்றியோ பேசாத தேசிய இன விடுதலை என்பது போலி தேசிய இன விடுதலை மட்டுமல்லாமல், அது சுரண்டுகின்ற வர்க்கத்தோடு கைகோர்க்கும் அரசியலே அன்றி வேறொன்றும் இல்லை”

மேலும் அவ்வாறு தேசிய இன தொழிலாளர் வர்க்கங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படக்கூடிய பகை ஆற்றல்களால் பிளவுபடுத்துவது முதலாளித்துவத்திற்கு வலு சேர்க்கும் துரோகச்செயல் என்றும் கூறுகிறார்.

“ஒரு தேசிய இனத்தின் தொழிலாளர்களை மற்றொரு தேசிய இனத்தின் தொழிலாளர்களோடு நெருங்கவிடாமல் பிரித்து வைக்கும் செயல்பாடும், ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்திற்குமான விடுதலையை மறுத்து ஒரு தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தை மற்றொரு தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்திற்கு பகை நிலையில் வைக்கும் செயல்பாடும் முதலாளித்துவ அரசுக்கு ஆதரவானதேயின்றி வேறு எதுவும் இல்லை. இத்தகைய செயல்பாடுகள் கடுமையான எதிர்க்கப்பட வேண்டியவை।”

அரசு பற்றிய புரட்சியாளர் லெனின் அவர்களின் விளக்கம் மிகப் புகழ்பெற்றது. புரட்சியாளர் எங்கல்ஸ் கூறிச்சென்ற விளக்கத்தை முன்னிறுத்தி “அரசு என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சுரண்டுவதற்கான கருவி” என்று கூறுகிறார்.

புரட்சியாளர் லெனின் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தை பற்றி பேசும் பொழுது பெண்கள் விடுதலையையே அதில் முதன்மையாக கூறுகிறார். பாட்டாளி வர்க்கமாக இருந்தாலும் குடும்ப அமைப்பில் பெண்கள் மென்மேலும் ஒடுக்கப் படுகின்றனர் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கும் அதே நேரத்தில் “பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது” என்று எச்சரிக்கிறார்.

மதம் பற்றிய புரட்சியாளர் லெனினின் பார்வை எந்த காலத்திலும் பொருந்தக்கூடிய பார்வையாக இருக்கிறது. “மதம் என்பது மக்களை மயக்குகின்ற ஒரு போதை பொருள்” என்று கூறுகின்ற அதே நேரத்தில் மதத்தை தேர்ந்தெடுப்பதும் விட்டு விலகுவதும் ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட பிரச்சனை என்றும் அதில் அரசு தலையிடக் கூடாது என்றும் தெளிவாகக் கூறுகிறார்.

“மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் என்று பிரகடனப்படுத்த வேண்டும். மதம் அரசாங்கத்தின் சார்புடையதாக தொடர்பு கொண்டதாக இருக்கக் கூடாது. மதம் சம்பந்தமான நிறுவனங்கள் அரசு அதிகாரத்துடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கக் கூடாது. எவருக்கும் எந்த மதத்தையும் தழுவுவதற்கும் பரிபூரண உரிமை உண்டு. எந்த மதத்தையும் தழுவாமல், அதாவது நாத்திகராக, இருப்பதற்கும் உரிமை உண்டு.”

இவ்வாறு நூற்றாண்டுகள் தாண்டி வாழக்கூடிய மனிதகுல அரசியலை உலக பாட்டாளி வர்க்கத்திற்கு அளித்துச்சென்ற புரட்சியாளர் லெனின் அவர்களின் 151 வது பிறந்த தினமான இன்று, அவருக்கு மே பதினேழு இயக்கம் தனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply