புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்த நாள் வாழ்த்துகள்!

புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்த நாள் வாழ்த்துகள்! – மே பதினேழு இயக்கம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தான் அனுபவித்த தீண்டாமையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர். தீண்டாமைக்கு எதிராக போராடியதோடு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கை உயர்வுக்காக இறுதி வரை போராடினார். கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து, சட்டம் பயின்றதொடு அரசியல், விஞ்ஞானம், நீதியியல், தத்துவம், மானிடவியல், சமூகவியல், பொருளாதரம் போன்றவற்றையும் கற்றுத்தேர்ந்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, ஒடுக்கப்பட்டவர்கள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி முன்மாதிரியாக திகழ்ந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை பெற போராடியதோடு, நாடாளுமன்றத்தில், சட்டமன்றங்களில் இன்று குறைந்தபட்சம் பட்டியலின பிரதிநிதிகள் பங்கேற்க வழிவகை செய்துகொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவின் அரசியல் சாசனத்தில் பட்டியலின மக்களின் உரிமைகளை உறுதி செய்தவர். சமூகத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டினார். இந்தியாவில் சாதிகள், சாதியை அழித்தொழிக்கும் வழி, நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன் போன்ற நூல்கள் மூலம், இந்துமத சனாதனத்தின் அடிக்கட்டுமானத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர்.

இந்துத்துவ சனாதன கட்டமைப்பில் ஜாதியாக சிதைவுற்று, பார்ப்பனியத்தால் சுரண்டப்பட்டு, கட்டுண்டு இருந்த மக்களின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை போராடியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். ஜாதியப் படிநிலையாக இருக்கும் இந்துச் சமூகம் சகமனிதனை எவ்வித ஈவு இரக்கமற்று விலங்கினும் கீழாக நடத்தியது மட்டுமல்லாமல், உழைக்கும் வர்க்கங்கள் ஒன்றுபடாமல் ஜாதிய மனோபாவத்துடன் பிரிந்து தமக்குள் சுரண்டல் போக்கினை மேற்கொண்டதால், சமத்துவ அரசியலை மேற்கொள்ளும் வகையேதும் இல்லாமல் சீரழிவதை ஆய்வுப்பூர்வமாக நிறுவி, அதிலிருந்து வெளியேறும் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமகனார் புரட்சியாளர் அம்பேத்கர்.

அவரது, “நான் இந்துவாக சாகமாட்டேன்” என்னும் சூளுரை இந்துத்துவவாதிகளின் முதுகெலும்பில் நடுக்கத்தைக் கொண்டு வந்தது. இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் பார்ப்பனர்கள், சனாதனிகளின் நெருக்கடியை மீறி கடுமையான போராட்டத்தை நிகழ்த்தி, பட்டியலின மக்கள் மட்டுமல்லாது, இடைநிலை சமூகங்கள், பெண்கள் என இந்துச் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டு உரிமை, சொத்துரிமை, நீதிபெறும் உரிமை என அனைத்தினையும் பெற்றுக்கொடுத்து முழு உரிமை கொண்ட குடிமகனாக ஒவ்வொருவரையும் சுயமரியாதையாக நிமிரச் செய்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் புகழ் வெல்லட்டும்.

இவ்வாறாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு வாழ்நாள் முழுதும் போராடிய புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்தநாளான இன்று (ஏப்ரல் 14, 2021), மே பதினேழு இயக்கம் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துகிறது. இந்நாளில் அவரின் புகழைப் போற்றுவதோடு, சாதியற்ற, சமத்துவம் நிறைந்த சமூகம் படைக்க உறுதியேற்போம்!

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply