தமிழ்நாடு அரசே! பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்திய சாதி-மத வெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்!

தமிழ்நாடு அரசே! பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்திய சாதி-மத வெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்! – மே பதினேழு இயக்கம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக தேர்தல் பணியாற்றிய அரக்கோணம் அடுத்த சோகனூரை சேர்ந்த சூரியா, அர்ஜூன் என்ற இருவர் சாதி வெறியர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் படுகாயத்துடன் மருத்துவம் பெற்று வருகின்றனர். அதே போல், திருப்போரூர் பகுதியில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த கதிரவன் என்பவரையும், பழனி அருகே சாதிவெறி கும்பலுக்கு வாக்களிக்காத காரணத்திற்காகவும் தாக்கியுள்ளனர். சாதிவெறியர்களின் இந்த காட்டுமிராண்டி செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களை சாதியாக பிளவுபடுத்தி சட்டமன்ற தேர்தலில் பாஜக பலனடைய முயற்சித்து வருகிறது. அதன்படி பாமக போன்ற கட்சிகளிடையே சாதிவெறியை ஊக்குவித்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதேவேளை இந்துத்துவ சனதானத்தை எதிர்த்து முனைவர் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இதனால் தேர்தலுக்கு முன்பிருந்தே விசிகவினர் மீது காவி கும்பல் விரோதத்தோடு இருந்து வருகிறது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் விசிகவிற்கு எதிராக போட்டியிட்ட பாஜக-பாமக-அதிமுக கூட்டணி, தேர்தலில் தோல்வியடைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், பாமக கட்சியினரிடையே சாதிவெறியை தூண்டி, விசிகவிற்கு வாக்களித்த, தேர்தல் பணியாற்றிய நபர்கள் மீது கடுமையான சாதிவெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சாதிப்பெயரை குறிப்பிட்டே இந்த தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.

தேர்தல் காழ்ப்புணர்ச்சியோடு , ஆதிக்க சாதியவெறியுடன் கொலைகளை செய்துள்ளனர். நீண்ட நாட்களாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய வெறி தேர்தல் காலங்களில் அப்பட்டமாக வன்முறையாக வெடிப்பதை கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தோழர்.திருமாவளவன் அவர்களின் தொகுதியின் பொன்பரப்பியில் இதே போன்றதொறு தாக்குதல் நடத்தப்பட்டது. தலித்துகள் வாக்களிக்க முடியாத நிலையை பாமக- இந்து முன்னனி கும்பல் ஏற்படுத்தியதை களத்திற்கு ஆய்வு செய்த மே பதினேழு இயக்கத் தோழமைகள் பதிவு செய்தார்கள்.

இதே போன்று தற்போது முடிவடைந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, பிரச்சாரத்தில்.ஈடுபட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் இதே சாதிய வன்மத்தை நேரில் எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்தப்படுகொலையானது பாமகவினால் வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய வெறியும், தேர்தலின் தோல்வி பயத்திலும், ஆதிக்க உணர்விலும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

மேலும் தோழர் திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மணல் கொள்ளையர்கள் குறித்த குற்றச்சாட்டையும் இணைத்து பார்ப்பது அவசியமாகிறது. சாதிவெறியும், சுரண்டலும், தேர்தல் பகையுணர்ச்சி இணைந்து நிகழ்த்தப்பட்ட இப்படுகொலைகள் தேர்தல் அரசியலில் புரையோடியிருக்கும் சீரழிவு சாதிய-கிரிமினல் கூட்டையும் அம்பலப்படுத்தியுள்ளது. இப்படியான சூழல் ஏற்படுமென தெரிந்தும் மெளனம் காக்கும் அரசு, காவல்துறை இக்குற்றவாளிகளை பாதுகாக்கிறதா எனக் கேள்வியும் எழுகிறது.

இதுபோன்ற வடஇந்திய கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து சாதி-மத வெறியை ஊக்குவிக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. சமூகத்தில் முன்னேற்றமடையாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய சாதிகளிடையே பாஜக இந்துத்துவ சாதிவெறியை தூண்டி, அப்பாவி இளைஞர்களை பலிகடாவாக்கி வருகின்றனர். பாஜக-பாமகவின் இந்த சாதி-மத தாக்குதல் போக்கு மிகவும் ஆபத்தானது. அதிகாரத்தில் பங்கெடுப்பதை தடுக்கும் சனாதன போக்கு முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.

இந்த கொடுஞ்செயலை கண்டித்து பாஜக-பாமக கட்சிகளை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. சாதி-மத வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட, தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அவர்களுக்கு நீதி வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசு குற்றவாளிகளை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply