2021 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு – மே 17 இயக்கம்

தமிழ்நாட்டின் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான மே பதினேழு இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (16-03-2021) காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு, மே பதினேழு இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாட்டினை எடுத்துரைத்தார்.

2021 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு – மே 17 இயக்கம்

வருகின்ற தேர்தலானது மதவெறி/சாதிவெறி அரசியலை வளர்க்கின்ற பாஜகவிற்கும், ஏனைய சனநாயக ஆற்றல்களுக்கும் இடையேயான தேர்தலாக அமைந்திருக்கிறது. எனவே பாஜகவையும், அதனோடு கூட்டணி அமைத்திருக்கின்ற அதிமுகவையும் மே17 இயக்கம் முற்றிலும் நிராகரித்து, அவர்கள் படுதோல்வி அடையச் செய்யவேண்டுமென தமிழக மக்களை மே17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

அதிமுக-பாஜகவின் மக்கள் விரோத கொள்கையினால் பலியான தங்கை அனிதா, தங்கை ஸ்னோலின் ஆகியோரை நினைவில் ஏந்தி இந்த கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்களை மே 17 இயக்கம் உரிமையோடு வேண்டுகிறது.

பெட்ரோல்-டீசல் மீதான எக்சைஸ் வரியில் பாஜக டில்லி அரசு எதிர்பார்த்ததைவிட 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயை கடந்த வருடத்தில் ஈட்டியது. இந்த வரியானது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய வரி வருவாயை பாஜக-மோடி அரசு கொடுக்க மறுக்கிறது.

இதே போல ஜி.எஸ்.டியில் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கினை பகிர்ந்து கொடுக்காமல் நிதியை முடக்குகிறது. மாநில அரசின் மீது கடன்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாநில சுயாட்சி பகுதிகளை மோடி அரசு முடக்கி வருகிறது.

மத்திய அரசிடம் வாங்கிய கடன் நிலுவை இருக்கும் பட்சத்தில் மாநில அரசானது சுயமாக வளர்ச்சிக்கான நிதியை திரட்டிக்கொள்ள இயலாது எனும் விதியை பயன்படுத்தி தமிழகத்தினை மேலும் மேலும் முடக்குகிறது.

தமிழகத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் 73 லட்சம் மக்கள். இவர்களில் 92% மக்கள் 2.5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் சாமானிய பாட்டளி மக்கள். இவர்களது நிலங்களை 4 வழிச்சாலை, எட்டு வழிச்சாலை, உயர்மின்னழுத்த கோபுரம் , தேர்வாய் கண்டிகை, காவிரி குண்டாறு, வளர்ச்சி திட்டம் எனும் பெயரில் கிட்டதட்ட 1 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது அதிமுக-பாஜக அரசு. இதே போல மீனவர்களின் நிலங்களும் சாகர்மாலா திட்டமான சிறு-குறு துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், நிலக்கரி கிடங்குகள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தனியார் வருவாய்க்கான கட்டமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.

1,60,000 கோடி ரூபாய் நட்டத்தை தமிழக மின்வாரியம் எதிர்கொண்டது. இது தனியார் கொள்முதல் காரணமாக நடந்திருக்கிறது. இதே போன்ற நிலையே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும் நிகழ்கிறது. தமிழக மருத்துவ-சுகாதார கட்டமைப்பு-மருத்துவ கல்வி சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ரேசன் கடைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 47,000 கோடி மானியத்தை மோடி அரசு குறைக்கிறது. இந்த பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலமான தமிழகம் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

இந்த அதிமுக அரசானது தமிழ்நாட்டுக்கான வரி உரிமை, வரிநிலுவை, பேரிடர்கால உதவி ஆகியவற்றை பாஜகவிடம் விட்டுக்கொடுத்திருக்கிறது. சூழலியலை பாதிக்கும் திட்டங்களான அனல்மின்நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள்-பாரத்மாலா, ஹைட்ரோகார்பன் திட்டம், சாகர்மாலா திட்டங்கள் ஆகியன தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் வேலைவாய்ப்பையோ, வருமானத்தையோ ஈட்டித்தராத நிலையில் தமிழக உழவர்கள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கிறது எனத் தெரிந்தும் பாஜகவின் இத்திட்டங்களுக்கு அதிமுக அரசு அடிபணிந்து தமிழர்களை வஞ்சித்தது. புதிய கல்வி கொள்கை, நீட்தேர்வு ஆகியன தமிழக மாணவர்களுக்கு விரோதமானவை என அறிந்தும் பாஜகவின் திட்டங்களை அதிமுக ஏற்றது. நிலுவையில் உள்ள சென்னை வெள்ளம், கஜா, வர்தா, ஒக்கி, நிவர், வறட்சி உள்ளிட்ட பேரிடர் கால உதவித் தொகையை பாஜக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எவ்வகையிலும் போராடி அதிமுக பெற்றிடவில்லை. புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தும், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை பெற்றுத்தராமலும், வறட்சிக்கான நிவாரணத்தை தராமலும் அதிமுக அரசு உழவர்களை வஞ்சித்தது. மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமென அறிவித்தாலும் அதை நடைமுறைப்படுத்தாமல், ஹைட்ரோகார்பன் திட்டங்களை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கிறது. பெட்ரோல்-சமையல் எரிவாயு விலையேற்றத்தை பாஜக தொடர்ந்து செய்து வருவதை எதிர்கொள்ளாத அதிமுக, பாஜகவிற்கு ஆதரவான பெரும் பணக்காரர்களின் நலனுக்காக தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்திருக்கிறது. சாதிக்கொடுமைகளை எவ்விதத்திலும் தடுக்க முன்வராமல் ஆணவப்படுகொலைகள், சாதிய வன்முறைகள் அதிகரிக்க அதிமுக அரசு துணை போனது என குற்றம் சாட்டுகிறோம். சாதிய வன்முறைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது கொடும் வழக்குகள் ஏவப்பட்டன. இதே போல சனநாயகரீதியில் போராடிய பல்லாயிரக்கணக்கானோர் மீதும் சட்டங்கள் ஏவப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாகினர். எட்டுவழிச்சாலை, டாஸ்மாக், ஜல்லிக்கட்டு போராட்டங்களில் ஏவப்பட்ட வன்முறை, ஸ்டெர்லைட்டில் உச்சத்தைத் தொட்டது. 15 பேர் படுகொலை செய்யப்பட்டதை தமிழினம் மறவாது.

தனியார்மயம், வேலைவாய்ப்பிழப்பு, தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலையில்லாமல் போவது, சிறு-குறு தொழில்கள் மீதான வரி-கடன் நெருக்கடி என தமிழகத்தின் பொருளாதாரத்தினை பாஜக முறித்தது. இதை அதிமுக எதிர்கொள்ளாமல் தவிர்த்தது. ரேசன்கடைகள், விவசாய கொள்முதல் உள்ளிட்டவை திட்டமிட்டு முடக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச்சட்டத்தினை சிறுபான்மை மக்கள் விரோதமாக பாஜக கொண்டு வந்ததை அதிமுக ஆதரித்தது. உபா (UAPA), என்.ஐ.ஏ உள்ளிட்ட கொடும் அடக்குமுறை சட்டங்கள், மாநில உரிமையை பறிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது அதிமுக.

தமிழ்மொழி நிராகரிப்பு, தொல்லியல் வளர்ச்சி முடக்கம், தமிழர் பண்பாட்டின் மீது சமஸ்கிருத தாக்கம் ஆகியவற்றை செய்துவரும் பாஜகவின் மதவெறி பிரிவுகளை அதிமுக ஊக்குவிக்கிறது. பெண் குழந்தைகள் மீதான தாக்குதல் , தலித்துகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட சமூக பாதுகாப்பின்மை அதிகரித்த அதிமுக ஆட்சி மேற்கூறிய பலவேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்படட்டும்.

7 தமிழர் விடுதலை இஸ்லாமிய அரசியல் சிறைவாசிகள் விடுதலை போன்றவற்றில் அதிமுக அரசு மனித உரிமை விரோதமாக நடந்து கொண்டது.

தமிழீழ தமிழர்களின் கோரிக்கையான தமிழீழ விடுதலை இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஆகியன அதிமுக அரசால் இந்திய அரசுக்கு எடுத்துச் செல்லப்படவேயில்லை. நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான சட்டமன்ற தீர்மானங்கள் இன்றளவும் ஏட்டளவிலேயே உள்ளன.

மேற்கூறிய சீரழிவிற்கு எதிராக போராடி வரும் கட்சிகள் குறிப்பாக, மக்களை திரட்டி, மே 17 இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களோடு இயங்கிய கட்சிகளை மே 17 இயக்கம் வாழ்த்துகிறது, ஆதரிக்கிறது. இவ்வாறாக செயல்பட்ட மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், மமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, ஆதித்தமிழர் பேரவை, விடுதலை தமிழப்புலிகள் கட்சி உள்ளிட்டவர்களை ஆதரிக்கிறோம்.

இவ்வாறான மக்கள் போராட்டங்களில் பங்கேற்காத, அதிமுக-பாஜக அரசினை, மதவெறி, சாதி வெறி பாசிச போக்குகளை மக்கள் எதிரிகளாக அடையாளம் காட்டாமல் திசை திருப்புகின்ற மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை நிராகரிக்கின்றோம். இவர்களால் தமிழக எதிர்கால அரசியல் சிதைக்கப்படும் எனும் எச்சரிக்கையுணர்வை மக்களிடம் பகிர விரும்புகிறோம்.

இவ்வாறான விடயங்களை கணக்கில் எடுத்து தமிழக மக்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும், பாஜக-அதிமுக கொடுங்கோல் ஆட்சியாளர்களை வீழ்த்தும் ஆற்றல்கொண்ட மக்கள் சார்ந்த வேட்பாளர்களை ஆதரித்து இந்த ஆட்சியை அகற்ற ஒன்றுபடுவோம். சாதி, மதம் கடந்து தமிழர்களாக ஒன்றுபட்டு தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியை காக்க பிரச்சாரத்திற்கு அனைவரும் முன்வரவேண்டுமென உரிமையுடன் வேண்டுகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply