புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்களின் நினைவு நாளில் மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

மார்ச் 14: புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களின் நினைவு நாள்!

“விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாறைகளில் களைப்போடு ஏறிச் செல்ல தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.”

இவை புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்கள் தனது மூலதனம் நூலில் கூறிய வரிகள். தான் கூறிய வரிகளுக்கேற்ப உடலாலும், மனதாலும் ஒரு மிகுந்த கடினமான வாழ்க்கையை வாழ்ந்து ‘ஒரு புரட்சியாளன் என்பவன் எப்படியிருக்க வேண்டும்’ என்பதை செயலால் உணர்த்திச் சென்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் என்று கூறுவதுதான் அவரைப் பற்றிய அறிமுகத்திற்கு சரியாக இருக்கும்.

உலகம் முழுவதும் ‘புரட்சியாளர்’ என்று கூறியவுடன் முதலில் நினைவு கூர்வது மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களை தான். அத்தகையதொரு சமூக அறிவியல் புரட்சியினை கட்டியமைத்த மாமேதை மார்க்ஸ் அவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தந்து சென்ற மார்க்சிய தத்துவமே இன்றளவிலும் வர்க்கப் புரட்சியின் அடிப்படையாக இருந்து வருகிறது. உழைப்பு, உற்பத்தி, வர்க்கம், வர்க்கங்களின் முரண் மற்றும் வர்க்கப் புரட்சி ஆகியற்றை பற்றி புரட்சியாளர் மார்க்ஸ் அவர்கள் தந்து சென்ற மூலதனம் என்ற நூல் மனித குலத்தின் மாபெரும் சொத்து என்றே கூறலாம்.

இந்திய ஒன்றியத்தில் பலரும் ‘வர்க்கமே இங்கு முகாமையான பிரச்சனை, சாதி மற்றும் வர்ணங்கள் ஒரு பிரச்சனையே அல்ல’ என்று இன்றளவும் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, ‘இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு சாதியை கொண்டு தான் இருக்கிறது’ என்று கூறி ‘அச்சாதிய கட்டமைப்பை உடைப்பதே புரட்சிக்கான முதல்படி’ என்று தெளிவுபடுத்திய மாமேதை புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்களின் நினைவு நாள் இன்று.

இந்நாளில் புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply