தமிழ்நாட்டு மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து படுகொலை! சிங்களப் பேரினவாத அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அணிதிரள்வோம்

தமிழ்நாட்டு மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து படுகொலை! சிங்களப் பேரினவாத அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அணிதிரள்வோம்! – மே பதினேழு இயக்கம்

தமிழர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகியோர் சென்ற படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி படகை மூழ்கடித்ததோடு, உயிருக்கு போராடிய மீனவர்களை துன்புறுத்தி அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்துள்ளது சிங்களப் பேரினவாத அரசு! அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் காப்பாற்ற முன்வந்த போது அவர்களை தாக்கி விரட்டியடித்துள்ளது. தமிழீழ தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசின் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இந்த மனிததன்மையற்ற செயல் இனப்படுகொலைக்கு ஒப்பானது. சிங்களப் பேரினவாத அரசின் இக்கொடூர செயலையும், அதற்கு துணைபோகும் இந்துத்துவ மோடி அரசையும் மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கையில் இனப்படுகொலையாளர்கள் ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழீழத் தமிழர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்ததோடு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. அதன் உச்சகட்டம் தான் தற்போது 4 தமிழ்நாட்டு மீனவர்களை எரித்து கொன்றது. இது, சிங்களப் பேரினவாதத்தின் தமிழினம் மீதான வெறுப்பு அரசியல் மற்றும் தமிழினப்படுகொலையின் ஓர் அங்கம்.

இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொன்ற போதும், அதன் மீதான இந்திய அரசின் அணுகுமுறை பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. இலங்கை கடற்படை மீது சர்வதேச நடைமுறையின் கீழ் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்க முடியும். புவிசார் அரசியலின் மையமான தமிழர் கடலை ஆக்கிரமித்திருக்கும் இந்திய கடற்படை, தமிழ்நாட்டு மீனவர்களை காப்பதில் துளி கூட முயற்சிப்பதில்லை என்பதை ஒக்கி புயலின் போதே காண முடிந்தது. தமிழீழ இனப்படுகொலையில் இந்திய அரசு வழங்கிய ஒத்துழைப்பு தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் கொலையிலும் நீடிப்பது 2000 ஆண்டுகால ஆரிய-திராவிட போரின் நீட்சியே!

இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிப்பதில் தமிழ்நாடு அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது மே பதினேழு இயக்கத்தின் நீண்டகால கோரிக்கை. இலங்கை மீதான பொருளாதாரத் தடையை கோரிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக்கொள்ளும் அதிமுக அரசு, வெறும் அறிக்கை விடுத்து இறந்த மீனவர்களுக்கு நட்டஈடு கொடுப்பதோடு கடமையை முடித்துக்கொண்டிருப்பது, தமிழ்நாடு அரசின் உரிமையை ஒன்றிய அரசிடம் அடகுவைத்ததையே காட்டுகிறது. தமிழர்களுக்கான அரசு என்பதை அதிமுக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்களை கொலைசெய்த இலங்கை கடற்படை மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கொலைவழக்கு பதிவு செய்து, கொலை செய்த இலங்கை கடற்படையினரை சர்வதேச விதிகளின் கீழ் கைது செய்து தமிழ்நாடு கொண்டுவர இந்திய ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்கவும், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழர்கள் மீன்பிடிப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மீதான இந்திய ஒன்றிய அரசின் வெளியுறக் கொள்கையை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும் என்று சட்டமன்றதில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசை கண்டித்தும், தமிழர்களை அழிக்க சிங்களப் பேரினவாத அரசிற்கு துணை போகும் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரேந்திர மோடி அரசை கண்டித்தும், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஜனவரி 25 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மதிமுக தலைவர் ஐயா வைகோ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் கலந்துகொள்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள அழைக்கிறோம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply