தமிழ்நாடு மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!

தமிழ்நாடு மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது! – மே பதினேழு இயக்கம்

மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம், மின் நுகா்வோருக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமாக மேற்கொள்வது தொடா்பான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் செயலின் ஒரு பகுதியாக மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

இந்த அறிவிப்பின் படி, ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகமும் ஒரு நாளைக்கு 412 ரூபாய் கூலியாக வழங்கக்கூடிய ஒப்பந்த பணிக்கு, 20 பேருக்கு குறையாமல் ஒப்பந்த தொழிலாளர்களை எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, குறைந்தபட்சம் 500 மின் பகிர்மான வட்டப் பிரிவுகள் ஒப்பந்த பணியாளர்களை எடுத்தால் குறைந்தது 10,000 புதிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

ஏற்கனவே பணியாற்றி வருகிற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நீண்ட கால ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஏற்கனவே உள்ள இந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் மேலும் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே உள்ள ஒப்பந்த பணியாளர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபாய் பெற்று வந்தார்கள் என்றால், புதிதாக பணியமர்த்தப்படும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்து 412 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூலியிலும் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதென்பது அரசே தொழிலாளர்களை சுரண்டுவற்கு ஒப்பாகும்.

மின் மீட்டர்களை மாற்றுவதற்கே இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்படப் போகிறார்கள். இதில் கணக்கீடுகள் செய்ய முடியாது. பொய்யான கணக்குகள் காட்ட முடியும். இது மிகப்பெரிய ஊழலுக்கு தான் வழிவகுக்கும். தனியார் முதலாளிகள் பெருமளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒப்பந்தராரர்களாக நியமிக்கப்படுவார்கள். ஒப்பந்ததாரர்களோ ஒப்பந்த பணியாளர்களிடம் அரசு வேலை, பணி நிரந்தரம் தொடர்பாக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றவே செய்வார்கள்.

மேலும், அரசியல்வாதிகளும், அரசியல் செல்வாக்கு, அதிகார பலம் உடையர்களை ஒப்பந்தராரர்களாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒப்பந்தத்த தொழிலாளர்களுக்கான 412 ரூபாய் கூலியை கணக்கில் காட்டிவிட்டு, தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே வழங்குவார்கள். ஆக, அரசும், தனியார் முதலாளிகளும் தொழிலாளர்களை சுரண்டும் வழிமுறையை தான் மின்சார வாரியம் தற்போது ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பொறியாளர் பணிகளுக்கு வெளிமாநிலத்தாரை மாநில அரசே நியமித்துள்ளது. தற்போது இந்த ஒப்பந்த பணிகளும் குறைந்த கூலிக்காக வெளிமாநில தொழிலாளர்களை கொண்டு நிரப்பப்படும். இது தமிழர்களுக்கான வேலைவாய்ப்பினை முற்றிலும் முடக்கும். கொரானா கால இடர்களுக்கு பிறகு வேலை தேடுவோர்களின் சூழலை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் உழைப்பை உறிஞ்சும் செயலை இது ஊக்குவிக்கும்.

அதேவேளை, ஏற்கனவே உள்ள ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வதன் மூலம் மின்வாரிய பணிகளை மிகசிறப்பாக கையாள முடியும். ஆனால் தொழிலாளர் பணி நியமனம் தொடர்பான பிரச்சனைகளை மின்சார வாரியம் மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களின் மின் பகிர்மானம் அதானி நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ளது போல், சென்னையை தாரை வார்க்கும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

தமிழ்நாடு அரசின் இது போன்ற செயல்கள் தற்போது ஐடிஐ, பட்டயப்படிப்பு படித்த பல்லாயிரக்கணக்கான வேலை இல்லா இளைஞர்களின் கனவை தகர்த்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து, மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply