மே பதினேழு இயக்கத் தோழர்கள் கைது! காவல்துறையினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்!

மே பதினேழு இயக்கத் தோழர்கள் கைது! காவல்துறையினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்!

சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் சென்னையின் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்தும் வேலையை அதிமுக அரசு செய்து வருகிறது. தலைமுறை தலைமுறையாக நெடுங்காலமாக வசித்து வரும் இப்பகுதி மக்கள், அரசின் இந்த செயலுக்கு மிகக்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

இப்பகுதி வாழ் மக்கள் அப்புறப்படுத்தப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். ஆனால் அரசோ, சென்னையை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் சென்னையின் மையப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்களை சென்னையை விட்டு வெளியே அப்புறப்படுத்தும் வேலையை சிலரின் நலனுக்காக மேற்கொள்கிறது. இதனால் சென்னையில் வசிக்க ஏழை எளிய பூர்வகுடி மக்களுக்கு தகுதியில்லை என்னும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

அரசின் இச்செயலை கண்டித்து, அப்பகுதி மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மே பதினேழு இயக்கத் தோழர்கள் இன்று (11-12-2020) நேரில் சென்றனர். ஆனால், தோழர்களை அப்பகுதிக்குள்ளே செல்ல அனுமதி மறுத்ததோடு, காவல்துறையினர் மிக அராஜகமாக நடந்துகொண்டு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்களை கைது செய்தனர்.

தோழர்கள் தற்போது கைது செய்யப்பட்டது எழும்பூர் வீரபத்திரன் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த அராஜக போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவளிப்பது என்பது அடிப்படை ஜனநாயக செயலாகும். மக்களின் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்தி, கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply