இட ஒதுக்கீட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு

இட ஒதுக்கீட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு

பல்வேறு தேசிய இனங்கள் உள்ளடக்கிய இன்றைய இந்திய நிலப்பரப்பை ஆங்கிலேயன் இந்தியா என்ற பெயரைக்கொடுத்து அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய நேரம் ஆங்கில ஆட்சியில் அதிகாரப் பதவிகளில் வெள்ளைக்காரர்கள் மட்டும் இருப்பதா? இந்தியர்களுக்கும் பதவி கொடு என்று போராடினார்கள். ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக சொல்லப்பட்ட 1947க்கு பிறகு இங்கு 97%மாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்களுக்கும் எல்லா மட்டங்களிலும் சம உரிமை கொடுங்கள் என்று கேட்டு போராடும் நிலை உருவானது.

இதற்காகவே பல போராட்டங்கள் தொடர்ச்சியாக இந்தியாவெங்கிலும் நடைபெற்றது. இறுதியில் சுதந்திரம் அடைந்து 42ஆண்டுகளுக்கு பிறகு 1990 ஆகஸ்டில் பெரும்பான்மை மக்கள் தொகையை கொண்ட பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் மட்டும் 27% இடஒதுக்கீடு வி.பி.சிங் அவர்களால் கொண்டு வரப்பட்டது. இந்த செயலை செய்தற்காகவே அவரது ஆட்சியை அன்றைய பிஜேபி அரசு கவிழ்த்தது என்பதெல்லாம் வரலாறு. கல்வியில் இன்னும் மோசம் சமீபத்தில் 15ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 2006இல் தான் இடஒதுக்கீடே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்தது.

இப்படி பெரும் போராட்டத்திற்கு பிறகு கொடுத்த இடஒதுக்கீட்டையாவது முழுமையாக கொடுத்தார்களா என்றால் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது. இன்று மத்திய அரசு பணிகளான குருப் ’ஏ’ பிரிவிலுள்ள மொத்த பணியிடங்களான 74,866பணியிடங்களில் 8316இடங்களே அதாவது வெறும் 11.11% இடங்களே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல குருப் ’பி’ பிரிவிலுள்ள 1,88,776மொத்த இடங்களில் வெறும் 20.069இடங்களே அதாவது 10.63% மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 3% மக்கள் தொகை கொண்ட உயர்சாதி பார்ப்பனர்களுக்கு இந்த இரண்டு பிரிவுகளிலும் 70% இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமில்லை இந்தியாவில் இயங்குகிற பொதுத்துறை வங்கிகளில் (Nationalised Bank) முக்கியமான பொறுப்புகளான பொது மேலாளர் ( Genral Manager) பிரிவில் மொத்தமுள்ள 450இடங்களில் வெறும் 5பேர் (1%) மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்கள், மேலாளர் (Manager) பிரிவில் மொத்தமுள்ள 1255 இடங்களில் 16பேர் (1.2%) மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்கள். ஆனால் 94% இடங்கள் பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்புகளில் மட்டும், கல்வி நிலையங்களை எடுத்துக்கொண்டால் இன்னும் மிகப்பெரும் அநீதி நிகழ்ந்திருக்கிறது. அதாவது மத்திய அரசு பல்கலைக்கழகங்களான ஐ.ஐ.டிகளில் பேராசிரியர்கள் பணியிடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவில் தான் இருக்கிறது. அதன் உச்சபட்சம் தான் சமீபத்தில் மருத்துவத்துறையில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய 11,000இடங்களை கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறது பிஜேபி அரசு. இந்த லட்சணத்தில் பார்ப்பனர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை வேறு மோடி அரசு அறிவித்திருக்கிறது.

இப்படியாக வஞ்சிக்கப்படும் இடஒதுக்கீடு உரிமையை மீட்டெடுப்பதன் மூலமே நம் மாணவர்களின் எதிர்கால கல்விக்கனவை நிறைவு செய்ய இயலும். தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வியும், வேலைவாய்ப்பும் இவ்வாறு பறிபோய்க்கொண்டிருப்பதை தடுக்க அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து இடஒதுக்கீட்டிற்கு எதிராக, சமூக நீதியை குழிபறிக்கும் விதமாக செயல்படும் பார்ப்பனீய பாஜக-ஆர்.எஸ்.எஸ் சதிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடிப்பது தமிழினத்தின் உடனடிக்கடமை. இக்கடமையை நிறைவேற்றிட அனைவரையும் திரட்டும் பொறுப்பினை ஏற்று மே பதினேழு இயக்கம் வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழகத்தில் மாபெரும் எழுச்சி மாநாட்டை திட்டமிட்டிருக்கிறது. கட்சி, சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தமிழர்களும் இந்த சமூகநீதியை, போராடி பெற்ற உரிமையை மீட்டெடுக்க திரள வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது. உணர்வெழுச்சியோடு தமிழர்கள் ஒன்றுபட்டு சமூகவிரோத சூழ்ச்சிகளை முறியடிக்க அணியமாவோம், இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுப்போம். மாநாட்டில் சந்திப்போம், சமூகநீதியை வென்றெடுப்போம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply