கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு தமிழகத்தில் நடத்த இருக்கும் வேல் யாத்திரையை தடுக்க வலியுறுத்தி தமிழக டிஜிபி திரிபாதி அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது

வட இந்தியாவில் யாத்திரைகள் மூலம் கலவரம் செய்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிற பிஜேபி. தமிழகத்திலும் வேல் யாத்திரை என்கிற பெயரில் ஒரு கலவரத்தை உருவாக்க திட்டமிட்டது. அதை தடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாகவும் இதில் அங்கம் வகிக்கும் இயக்கங்களின் தலைவர்கள் இன்று காலை 11 30 மணியளவில் தமிழக டிஜிபி திரிபாதி அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

கொடுக்கப்பட்ட மனு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது

தமிழக அரசே! பாஜகவின் வகுப்புவாத வேல் யாத்திரையை தடைசெய்!

  • பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகவும், தற்போதைய கொரோனா பரவல் காரணமாகவும் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருமானமிழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றியும், பலரும் இருந்த வேலைவாய்ப்பை இழந்தும், அனைத்து தரப்பு மக்களும் வருமானமிழந்தும், மனநிம்மதி இழந்தும், நோயுடனும், வறுமையுடனும் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர் வகுப்புவாத வேல் யாத்திரையை மேற்கொண்டு, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்து, கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டுள்ளனர். இத்தகைய வகுப்புவாத ரீதியிலான நிகழ்ச்சிக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது.

கடந்த காலங்களில் பாஜகவின் அத்வானி உள்ளிட்டவர்கள் நடத்திய ‘ரத யாத்திரை’ போன்று இந்த வேல் யாத்திரை மூலமாகவும் தேவையற்றப் பிரச்சினைகளை, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவை திட்டமிட்டு ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மூலம் வட இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயமடைந்த பாஜக மற்றும் சங்பரிவார கும்பல்களின் முயற்சி தமிழகத்தில் பலனிக்காத நிலையில், தமிழர்கள் அதிகம் வழிபடக்கூடிய முருகப்பெருமானை கொண்டு அரசியல் லாபமடைய பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்த வேல் யாத்திரையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தைப்பூசம் அல்லது பங்குனி உத்திரத் திருவிழாவின் பொழுது தை மாதம் அல்லது பங்குனியில் முருகப் பெருமானை வேண்டி உண்மையான ஆன்மீக பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். அவர்களால் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாது என்பதை தமிழகம் வரலாற்று ரீதியாக கண்டு வருகிறது. ஆனால், பாஜக தற்போது திட்டமிட்டிருக்கும் வேல் யாத்திரை என்பது முழுக்க முழுக்க வகுப்புவாத நோக்குடனும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வன்முறை நோக்குடனேயே திட்டமிடப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு போக்கு காரணமாகவும், திட்டமிடப்படாத நடவடிக்கைகள் காரணமாக தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் புரிவோர், படித்த இளைஞர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழர்களுக்கு பல்வேறு வகைகளில் விரோதமான போக்கை பாஜக அரசு கையாண்டு வருகின்றது. காவிரி விவகாரமாகட்டும், நீட் விவகாரமாகட்டும், இடஒதுக்கீடு விவகாரமாகட்டும் இவை அனைத்திலுமே தமிழர் விரோத போக்கை கையாண்டு வரும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாஜக மக்களிடம் செல்லாக்காசாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில், எதிர்வரும் தமிழக தேர்தலை கணக்கில்கொண்டு தங்களின் சாதனையாக குறிப்பிட எதுவும் இல்லாத சூழலில், ஆன்மீகத்தின் பெயரால் மத உணர்வைத் தூண்டி, மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சி மூலமாக, தமிழகத்தில் ரத்தக்களரியை உருவாக்கும் வெறுப்பு யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கை நோக்கி செல்கின்றன. இந்தியாவிலும் நவம்பர் 30வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்த ஊரடங்கு கூட்டம் கூடுவதை தடை செய்கிறது. ஆகவே, தமிழக அரசு கொரோனா பரவலையும் கருத்தில்கொண்டு பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது. இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டுவோம் என்று பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர். இப்படி கூட்டத்தை கூட்டுவதாலும், மாநிலம் முழுவதும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு அந்த கூட்டம் பயணிப்பதாலும், தற்போது குறைந்துவரும் கொரோனா பரவலானது மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது. ஊரடங்கை காரணம் காட்டி மக்களின் அடிப்படை உரிமைக்காக கூட நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, தமிழகத்தின் அமைதியை கெடுக்கும் விதத்தில் நடத்தப்படக்கூடிய வேல் யாத்திரைக்கு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது. தமிழகத்தில் நிலவும் சமூக அமைதியை சீர்குலைத்து, அந்த சீர்குலைவின் மூலமாக தங்கள் அரசியல் அஸ்திரத்தை நிறுவ நினைக்கும் பாஜகவுக்கு தமிழக அரசு ஒருபோதும் துணைபோகக் கூடாது.

மத்தியில் இருக்கும் தங்கள் ஆட்சியாளர்களைக் கொண்டு தங்களின் திட்டங்களை சாதித்துக் கொள்ளலாம் என்று தமிழக பாஜக கருதுகிறது. இவர்களின் இந்த அணுகுமுறையை எதிர்த்து, தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கொரோனாவை காரணங்காட்டி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள சூழலில், பாஜகவின் இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதோடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் காரணமாக அமைந்திடும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு
முனைவர் தொல்.திருமாவளவன் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
கொளத்தூர் மணி – திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை கு.இராமகிருட்டிணன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சுப.உதயகுமார் – பச்சைத் தமிழகம் கட்சி
கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி
தியாகு – தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
இனிகோ இருதயராஜ் -கிருஸ்துவ நல்லெண்ண இயக்கம்
பொழிலன் – தமிழக மக்கள் முன்னணி
நெல்லை முபாரக் – எஸ்.டி.பி.ஐ.
கே.எம்.சரீப் – தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி
குடந்தை அரசன் – விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி
திருமுருகன் காந்தி – மே17 இயக்கம்
கே.எஸ்.அப்துல் ரஹ்மான் – வெல்ஃபேர் பார்ட்டி
நாகை திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் கட்சி
சுந்தர்ராஜன் – பூவுலகின் நண்பர்கள்
முகமது சேக் அன்சாரி – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
பேரா.அ. மார்க்ஸ் – என்.சி.ஹெச்.ஆர்.ஓ.
இரா.அன்புவேந்தன் – இந்திய குடியரசுக் கட்சி
வழ.வெண்மணி – திராவிடத் தமிழர் கட்சி
பாலன் – தமிழ் தேச மக்கள் முன்னணி
கா.சு.நாகராஜன் – தமிழ்நாடு திராவிடர் கழகம்
பேரா.த.ஜெயராமன் – மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
வழ, ஹென்றிதிபேன் – மக்கள் கண்காணிப்பகம்
கோ.சுகுமாறன் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு
செள.சுந்தரமூர்த்தி – தமிழர் விடுதலைக் கழகம்
வழ.ரஜினிகாந்த் – மக்கள் அரசு கட்சி
உ.இளமாறன் – தமிழர் விடுதலைக் கட்சி
தீபக் – டிசம்பர் 3 இயக்கம்
கண குறிஞ்சி – தமிழ்நாடு மக்கள் மன்றம்
யா.அருள்தாஸ் – மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
சு.அகத்தியன் – தமிழ் சிறுத்தைகள் கட்சி
ஜாகுலின் ஜோதி – NAPM

Leave a Reply