பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்கும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்கும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

இராஜீவ்காந்தி கொலை வழக்கின் சிறைவாசிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 நிரபராதி தமிழர்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான எழுவர் விடுதலையை முன்னெடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தனது மாநில உரிமையை பயன்படுத்தி 7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை தமிழக அமைச்சரவையை கூட்டி நிறைவேற்றியது. ஆனால் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை கூறி கிடப்பில் போட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு விடுவித்தும் 7 பேரும் விடுதலை அடைவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளன் அவர்களின் கருணை மனு மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதில் உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், “எங்கள் வரம்பை மீறும் நோக்கமில்லை. அதே நேரம், 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.” என்று கூறினார். மேலும், 2014 சத்ருகன் சவுகான் வழக்கில், கருணை மனுக்கள் மற்றும் மாநில சட்டமன்ற தொடர்பான வழக்குகளில் குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளதை குறிப்பிட்டு நீதிபதி நாகேஸ்வர ராவ் கருத்து தெரிவித்தார்.

பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் (MDMA) அறிக்கையை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஆளுநர் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறிய காரணத்தை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் விசாரணைக்கும் பேரறிவாளனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென சிபிஐ கூறியுள்ளதை குறிப்பிட்டவர், சர்வதேச சதி குறித்து விசாரிக்க வேண்டியது சிறைக்கு வெளியில் இருப்பவர்களிடம், அதற்கும் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துகள் எந்தவித முகாந்திரமும் இல்லாம தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை திட்டமிட்டு கிடப்பில் போட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் கிடப்பில் போடுவதென்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். தமிழ்நாட்டு ஆளுநர் இனியும் தாமதிக்காமல் 7 தமிழர் விடுதலை குறித்த தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குவதே 30 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களுக்கு சிறு ஆறுதலை அளிக்கும்.

தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதனை கிடப்பில் போடுவது என்பது தமிழ்நாட்டு அமைச்சரவையை அவமதிப்பதிற்கு ஒப்பானது என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது அதிருப்தியை பதிவு செய்ய வேண்டும். மேலும் செயல்படாத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என குடியரசு தலைவருக்கு வலியுறுத்த வேண்டும். 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது போல, 7 தமிழரை விடுவிக்கும் தீர்மானத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு நிர்பந்திக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் முடிவெடுக்கும் வரையில், 7 பேரையும் எவ்வித நிபந்தனைகளுமின்றி முடிவில்லா பரோலில் விடுவிக்க அரசாணை வெளியிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010
04/11/2020

Leave a Reply