முத்தையா முரளிதரன் பற்றி தயாரிக்கப்படும் படத்திலிருந்து திரு.விஜய் சேதுபதி உட்பட பிற படைப்பாளிகள் வெளியேறுவதே சுயமரியாதை

இலங்கை அரசும் பிற தமிழின விரோத கொள்கை கொண்ட நாடுகளும் தமிழர்களிடத்தில் தங்களது அரசியலை மையப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த அரசியல் மிகச்சமீபத்தில் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. பண்பாட்டு துறை முதல் அரசியல் துறை வரை இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்திருக்கின்றன. தமிழீழப் போரின் போது மேற்குலகின் அரசியலை நியாயப்படுத்தியவரும், தமிழீழ இனப்படுகொலைக்கு விடுதலைப் புலிகளும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் பொறுப்பு என முழங்கியவருமான நார்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், அமைதிப் பேச்சுவார்த்தை பிரதிநிதியுமான அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படும் எரிக் சோல்ஹேம் களம் இறக்கப்படுகிறார், மறுபுறத்தில் பண்பாட்டு தளத்தில் இலங்கையின் ஆளுமைகளான முத்தையா முரளிதரன் போன்ற சிங்களக் கைக்கூலிகள் பற்றிய திரைப்படங்கள் இங்கே உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தின் அரசியல் களம் தமிழீழ அரசியலை விட்டு விலகி இருப்பதாக இந்த அரசுகள், ஆற்றல்கள் தவறாக எடை போட்டிருக்கின்றன.

முத்தையா முரளிதரன் எனும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டு வீரரைப் பற்றிய திரைப்படம் தமிழில் எதற்கு?. இலங்கை எனும் பேரினவாத அரசின் வன்முறையின் மீது எவ்வித விமர்சனமும் கொள்ளாத ஒரு விளையாட்டு வீரரை எவ்வாறு தமிழினம் தன் மகனாக ஏற்றுக் கொள்ளூம்? பிறப்பில் தமிழராக இருப்பதாலேயே ஒருவரை தமிழினத்தின் பெருமையாக கருதிக் கொள்ளும் அரசியல் நமக்கு கிடையாது. அதுவும் ஒரு இனப்படுகொலை அரசை எவ்விதத்திலும் சங்கடத்திற்குள்ளாக்காமல், தனது வளர்ச்சிக்காகவும், தனது சுயநலத்திற்காகவும் ஆதரித்த ஒருவரை விளையாட்டு வீரராகவும், தமிழராகவும் நாம் பார்த்துவிட இயலாது. உலகெங்கும் பல விளையாட்டு வீரர்கள் அரசின் பயங்கரவாதங்களை, இனவெறியை, படுகொலை போர்களை, மனித உரிமை மீறல்களைக் கண்டித்து எதிர்ப்பினை தெரிவித்து இருக்கிறார்கள். இதனாலேயே தண்டிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டும் இருக்கிறார்கள். தாம் விலக்கப்படுவோம் எனத் தெரிந்தே பாதிக்கபப்ட்ட மக்களுக்காக குரல் கொடுத்த பல வீரர்களை உலகம் கண்டிருக்கிறது. பிற நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுத்து விலக்கம் செய்யப்பட்ட வீரர்களே உண்மையான விளையாட்டு வீரர்களாக போராட்ட உலகம் நமக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. இந்நிலையிலேயே நாம் இலங்கையின் முத்தையா முரளிதரனை நாம் மதிப்பிட இயலும்.

மேலும் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிலும், குறிப்பாக சென்னை கிரிக்கெட் மைதானத்தில் விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்கவும் செய்தது. இவ்வாறு இலங்கை விளையாட்டு வீரர்களை தமிழர்கள் புறக்கணிக்கவும் செய்திருக்கிறார்கள்.

தமிழ்த்திரையுலகம் காலம் காலமாக தமிழீழ மக்களுக்கு துணை நின்றிருக்கிறது. அவர்களது இன்னல் மிகு காலங்களில் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகவும் எழுந்திருக்கிறது, இனப்படுகொலை போர் காலத்தில் இந்திய அரசினை விமர்சித்து துணிச்சலோடு நிமிர்ந்து நின்றிருக்கிறது, இதற்காக மூத்த படைப்பாளிகள் உட்பட பலர் கைதும் ஆனார்கள். எனவே தமிழ்த்திரையுலகத்தை தனது வசமாக்க இந்திய அரசும், இலங்கை அரசும் பல்வேறு கூட்டு முயற்சிகளை செய்து வந்தது. 2010இல் ஐஃப்பா விருது வழங்கும் விழாவில் இதற்கான திட்டத்தினை இந்தியாவின் தொழிற்கூட்டு சங்கமான பிக்கி தயாரித்து வெளியிட்டது. கிட்டதட்ட 400 கோடி ரூபாய் செலவில் விருது வழங்கும் நிகழ்வினை கொழும்புவில் ஏற்பாடு செய்து தமிழர்களின் எதிர்ப்பினால் கடுமையான தோல்வியை சந்தித்தது. இந்நிகழ்வை முதன்முதலாக அம்பலப்படுத்தி போராட்டத்தை நடத்தியது மே17 இயக்கம். இதற்காக கமலஹாசன் வீட்டினை முற்றுகையிட்டு போராடி இந்நிகழ்ச்சியை முறியடிக்கவும் செய்தோம். அன்றிலிருந்து தொடர்ந்து இலங்கை அரசு தமிழ் திரையுலகத்தின் மீது தொடர் ஆக்கிரமிப்பை செய்ய முயற்சி செய்ததன் விளைவிலேயே, புலிப்பார்வை போன்ற கீழ்த்தரமான படைப்புகள் தமிழீழ போராட்டத்தை கொச்சைப்படுத்தி முன்னெடுக்கப்பட்டன. இலங்கை அரசின் ஆதரவு பெற்ற ‘லைக்கா’ போன்ற பெரு நிறுவனங்கள் இன்றும் கூட தமிழ்திரையுலகை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயலுகிறது. இம்முயற்சிகளின் தொடர் நிகழ்வாகவே இப்பொழுதும் பல நகர்வுகள் தமிழ்த்திரையுலகில் நிகழ்கின்றன.

இந்தப் பின்னனியில் முத்தையா முரளிதரன் பற்றி தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதும் அதில் பங்கேற்பதும், அப்படத்தை விநியோகிப்பதும் தமிழ்நாட்டின் அறம் சார்ந்த தமிழீழ ஆதரவு அரசியலுக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இப்படத்தை தயாரிக்கும் திரைப்பட நிறுவனமும், இதை இயக்கும் இயக்குனரும், மற்றும் இதில் முக்கிய முரளிதரன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர் திரு.விஜய் சேதுபதி அவர்களும், இதர படைப்பாளிகளும் இப்படத்திலிருந்து வெளியேறுவது மகிழ்ச்சிக்குரியதாக அமையும். நமால் ராஜபக்சே போன்ற இனப்படுகொலையாள குடும்பத்தினைச் சேர்ந்தவனே இப்படம்குறித்து செய்தி வெளியிட்டு மகிழ்வது என்பது தமிழினத்தை மேலும் அவமானப்படுத்தும் நிகழ்ச்சியே. கொலைகாரக் குற்றவாளிகள், அதன் கூட்டுக்குற்றவாளிகள் இணைந்து இப்படத்திற்கு பின்னனியில் இயங்குவது அப்பட்டமான பின்னர் இப்படத்திலிருந்து திரு.விஜய் சேதுபதி உட்பட பிற படைப்பாளிகள் வெளியேறுவது சுயமரியாதைக்குரியதென மே17 இயக்கம் கருதுகிறது.

மக்கள் சார்ந்த கலைஞனாக தன்னை மிக நெருக்கடிக்கு இடையில் வளர்த்தெடுத்து எங்கள் குரலாக, எங்கள் முகமாக, எங்கள் உணர்வாக இருக்கிறீர்கள் என சாமானியர்கள் போற்றும் ஒரு கலைஞனாக இருக்கும் திரு.விஜய் சேதுபதி அவர்களும் இதை ஏற்பார் என நம்புகிறோம்.

தமிழர்கள் ஒற்றுமையாக இந்தச் சதிகளை முறியடிக்க உறுதி பூண்டிருக்கிறோம். அம்முயற்சியில் உங்களது கரத்தையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்போம்.

தமிழ்த் திரையுலகத்தை ஆக்கிரமிப்பதன் மூலமாக தமிழர்களிடத்தில் பிரிவினையையும், தமிழின விரோத அரசியலையும் விதைத்துவிட முயலும் சிங்களப் பேரினவாதத்தை வேரறுக்கும் வலிமை தமிழர்களுக்குண்டு. தமிழர்களின் கடுமையான எதிர்ப்பினை சிங்களப் பேரினவாதிகள் இப்படத்தின் மூலமாக சந்திப்பார்கள். தமிழினப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவில்லை. தமிழினப்படுகொலைக்கான நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயப்போவதுமில்லை.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply