தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க

தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க – மே17 இயக்கம்

தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு வருகிற சூழ்நிலையில், அதை தடுத்து நிறுத்தி பட்டியல் இன மக்களை பாதுகாக்கும் பொறுப்பு எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு உண்டு. இதற்காகத்தான் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் 1989 கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி ஆணையம் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கூடி விவாதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த ஆணையம் கடைசியாக 2013 ஜூன் 25ஆம் தேதி கூடியதே தவிர அதை தவிர்த்து கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட சந்தித்து பேசவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளியே வந்திருக்கின்றது.

இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘பிற்படுத்தப்பட்ட வாரியத்திற்கான’ ஆணையரை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு நியமிக்காமல் இருக்கிறது. இதனால் இந்த ஆணையம் செயல்படாமல் இருந்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதே போல ஒரு சூழ்நிலையை எஸ்சி/ எஸ்டி மக்களுக்கும் செய்வதற்காகத் தான் தமிழக அரசு எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் கூட்டத்தை கூட்டாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.

ஆகவே இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாமல் இருக்க தமிழக அரசு கூடாமல் இருக்கும் எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் மற்றும் இதுவரை ஏன் நடத்தவில்லை என்பது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply