ஸ்விகி பணியாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! – மே பதினேழு இயக்கம்

ஸ்விகி பணியாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! – மே பதினேழு இயக்கம்

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க மறுப்பதோடு, பல மடங்கு தொடர் ஊதிய குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவது போன்ற காரணங்களினால் ஸ்விகி நிர்வாகத்திற்கு எதிராக அதன் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில் பெரும்பாலும் பட்டதாரிகளே இந்த பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் நிலையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அவர்களின் உழைப்பை சுரண்டும் வேலையை ஸ்விகி நிர்வாகம் செய்கிறது. இது குறித்து சிலர் முறையிட்ட போது, பணியாளர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நிர்வாகம் தரக்குறைவாக நடத்தியுள்ளது.

ஸ்விகி நிர்வாகத்தின் இது போன்ற செயல்களை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. பணியாளர்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கிறது. தொடர் போராட்டம் வெல்லும் வரை பணியாளர்களுக்கு துணை நிற்போம் என உறுதியளிக்கிறது.

ஸ்விகி நிர்வாகமே!

  • பணியாளர்களுக்கு ஒப்பந்தத்தின் போது வழங்கப்பட்ட ஊதியத்தை குறைந்தபட்ச ஊதியமாக உறுதி செய்து, பணி செய்த காலத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்கிடு!
  • பணியாளர் உரிமை சட்டத்தின் கீழ் வேலை நேரத்தையும், அதற்கேற்றவாறு வேலைப்பளுவையும் குறைத்திடு!
  • வேலை நேரத்திற்கு மேல் பணி செய்பவர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும், ஊக்கத்தொகையும் வழங்கிடு!
  • பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவதை நிறுத்தி, சுயமரியாதை பாதிக்காத வண்ணம் மரியாதையுடன் நடத்திடு!

தமிழக அரசே!

  • ஸ்விகி நிர்வாகத்திற்கு எதிரான பணியாளர்களின் போராட்டத்தில் உடனடியாக தலையிடு!
  • பணியாளர்கள் உரிமை சட்டத்தினை ஸ்விகி நிர்வாகம் முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடு!
  • பணியாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்!
  • பட்டதாரி பணியாளர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலையை செய்யும் வகையில் தகுந்த வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடு!

போராடும் பணியாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அவர்களது சேவையை பெரும் நம் அனைவரது கடமை. ஆகவே, போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010