கொரோனா பாதித்த பகுதிகளிலிருந்து வரும் சாதாரண நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு
09.04.2020

கொரோனா பாதித்த பகுதிகளிலிருந்து வரும் சாதாரண நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு வெளியிடும் அறிக்கை

கொரோனா நோயின் பரவுதலைத் தடுக்க அரசு மருத்துவமனைகள் அந்நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவரும் நிலையில் கொரோனா பாதிக்காத நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகள் புறக்கணிப்பதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் பகுதியில் வசிக்கும் ஒரே காரணத்திற்காக கர்ப்பிணிகள் என்றும் பாராமல் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைக்கழிக்க விடுவது கண்டனத்திற்குரியது.

சிறுநீரக பிரச்சினைகள், பிரசவம், இதயநோய் போன்ற உடல்நலக் குறைவிற்காக மருத்துவமனைகளை அணுகும் சாதாரண நோயாளிகள் அவர்கள் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதினால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பது மேலும் கோவை, திருத்தணி, இராமநாதபுரம் ஆகிய பகுதியில் தனியார் மருத்துவமனைகளில் மதவெறுப்பை வெளிபடுத்தி சிகிச்சையளிக்க மறுத்த சம்பவங்கள் புனிதமான மருத்துவ அறநெறிகளுக்கு முரணான மனிதநேயமற்ற போக்கை வெளிக்காட்டுகிறது.
மேலும் கொரோனா பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் மற்ற சிகிச்சை கட்டணங்களைப் பலமடங்கு உயர்த்தியுள்ளதும் கண்டனத்திற்குரியது.
நீரழிவு நோய் உட்படப் பல நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் உள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைப்பதற்கும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனாவை காரணம் காட்டி கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளை அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளை அரசு முன்பு அறிவித்தது போல் அவர்களது உரிமத்தை ரத்து செய்யவும் அல்லது இதே நிலை நீடித்தால் மக்களை பாதுகாக்க தனியார் மருத்துவமனைகளை தமிழக அரசே எடுத்து நடத்தும் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த மார்ச் 31 அன்று கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை சமூக நலன் கருதி அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். நேற்று உச்சநீதிமன்றம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் பரிசோதனைக்காக எவ்வித கட்டணமும் வாங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை எமது குழு வரவேற்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கண்டிப்பாக கடைபிடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு
பழ.நெடுமாறன்,
தொல்.திருமாவளவன்,
த.செ.கொளத்தூர்மணி,
பேராசிரியர் ஜவாஹிருல்லா,
தி.வேல்முருகன்,
தெஹ்லான் பாகவி,
கு.ராமகிருட்டினன்,
திருமுருகன் காந்தி,
கே.எம்.சரீப் ,
இனிகோ இருதயராஜ்,
வன்னி அரசு,
நெல்லை முபாரக்,
ப. அப்துல் சமது,
பெரியார் சரவணன்,
சுப. உதயகுமாரன்

Leave a Reply