பெருங்காமநல்லூரில் வெள்ளையனின் கைரேகை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கு 100 – ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

பெருங்காமநல்லூரில் வெள்ளையனின் கைரேகை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கு 100 – ஆம் ஆண்டு வீரவணக்க நாள்: மே 17 இயக்கம்

வரலாறு நெடுகிலும் நீதிக்கான நெடும் போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழர்கள் நடந்திய போராட்டங்கள் சொல்லி மாளாது. அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்று தான் பெருங்காமநல்லூர் போராட்டம்.

1870களில் இந்தியாவில் குற்றச்செயல்களை குறைக்க எண்ணிய ஆங்கிலேய அரசு ’குற்றப்பரம்பரையினர் சட்டம் 1871’ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் தான் பின்னாளில் ஆங்கிலயே அரசுக்கு எதிராக யாரெல்லாம் காங்கிரசோடு சேர்ந்து போராடுவார்கள் என்று ஆங்கில அரசு நினைத்ததோ அவர்களை எல்லாம் ‘பிறவிக்குற்றவாளியாக்கும்’ படி இந்த சட்டத்தை ஏவியது.

இந்தசட்டம் பலதடவை மிகமோசமாக திருத்தப்பட்டு 1911இல் சென்னை இராஜதானி தவிர்த்து அனைத்து இடங்களிலும் அமுல்படுத்தப்பட்டது. இறுதியாக 1913 இல் சென்னை இராஜதானியிலும் அமுல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் நாடெங்கிலும் 213சாதிகளை குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கிலேயே அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் 89சாதிகள் இப்பட்டியலில் இடம்பெற்றது.

இந்த சட்டத்தின் படி இந்தபட்டியலிலுள்ள சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் பிறவிக்குற்றவாளிகள். மேலும் அந்தசாதியிலுள்ள 18வயதுக்கு மேலுள்ள அனைவரும் தங்களது பெயர் முகவரி கைரேகை உள்ளிட்ட அனைத்தையும் காவல்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். இரவில் ஆண்கள் யாரும் வீட்டில் தூங்கக்கூடாது காவலர்கள் கண்காணிப்பில் தான் தூங்கவேண்டும். இதை மீறுபவர்கள் அல்லது சந்தேகத்துக்குரியவர்கள் என்று அதிகாரிகள் நினைத்தால் அவர்களுக்கு கேள்விகேட்பாரின்றி 6 மாதத்திலிருந்து 3ஆண்டு வரை சிறைதண்டனை உள்ளிட்ட மிகக்கொடுமையாக இந்தசட்டம் இருந்தது.

இதனை மதுரையை சுற்றியுள்ள பிறமளைகள்ளர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தனர். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட்டுவிட்டு இந்தசமூகத்தில் பிறந்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என்பது சுயமரியாதை உள்ள யாரும் ஏற்கமாட்டோமென்று அரசிற்கு பலமுறை கடிதம் வாயிலாகவும், பிரதிநிதிகள் வாயிலாகவும் சொல்லிப்பார்த்தனர். ஆனால் அரசு விடாபிடியாக கைரேகைச்சட்டத்தை அமல்படுத்தியே தீருவதென்று இருந்தது, இதனால் வேறுவழியின்றி பெருங்காமநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் உகந்த சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் சமூக நீதிக்கு எதிரான சட்டத்திற்கு ஒருநாளும் கட்டுப்படமாட்டோமென்று அறிவித்தனர்.

இந்நிலையில் 3 ஏப்ரல் 1920 அன்று இச்சட்டத்தின் படி பெருங்காமநல்லூர் பிறமளைகள்ளர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்யவேண்டுமென்று ஆங்கிலயே அரசு அறிவித்து பெரும்படையுடன் பெருங்காமநல்லூரில் முகாமிட்டது. பெருங்காமநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர், இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயே அரசு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே மாயாக்காள் என்ற ஒரு பெண் உட்பட 16பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. கள்ளர் சமுதாயத்திற்கென்று தனித்துறையை உருவாக்கி அவர்களுக்கு வேண்டிய நலத்திட்டங்களை செய்யச்சொல்லி இங்கிலாந்து பாராளுமன்றம் உத்தரவிட்டது. இதனை அந்த மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். உரிமைக்காகவே போராடி உயிரை விட்டிருக்கிறோம். ஆகவே அந்தசட்டத்தை நீக்குங்கள் என்று கேட்டனர்.

ஆனாலும் ஆங்கிலேயே அரசு விடாபடியாக இந்த சட்டத்தை அமுல்படுத்துவதிலேயே குறியாக இருந்தது. ஆயினும் மக்களின் கோபத்தை குறைக்க மாறுதல் செய்திருக்கின்றோமென்று சொல்லி மேலும் கொடுமையானதாக இந்த சட்டத்தை மாற்றி குற்றப்பரம்பரை (சென்னை திருத்தச் சட்டம்) 1924இல் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்டத்தின் கொடுமையை 1926ஆம் ஆண்டு வந்த தீர்ப்பு நமக்கு உணர்த்தும். அதாவது 03-09-1926ஆம் ஆண்டு மாயாண்டித்தேவன் என்பவர் இரவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து ஒரு ஆட்டினை திருடியதான ஒரு குற்றச்சாட்டிற்காக அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்ற தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இத்தண்டனை மிகக்குறைவானது எனவும், இவர் மூன்று முறை குற்றங்களைச் செய்திருக்கிறதை கணக்கில் எடுத்து நாடுகடத்தும் ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டுமெனவும் கூறி அரசு மேல்முறையீடு செய்தது.

1911ஆம் ஆண்டுவாக்கில் உசிலம்பட்டிப் பகுதியில் வசித்த இம்மக்களின் பலநூறு குடும்பங்களை சென்னையின் பம்மல், ஓட்டேறி பகுதியில் மற்றும் விருதாச்சலத்தில் குடியமர்த்தினார்கள். இது செட்டில்மெண்ட் முகாம் என அழைக்கப்பட்டது. மிகக்கொடுமையான முறையில் கிட்டதட்ட 40 ஆண்டுகள் வெளியுலகத் தொடர்பின்றி வாழ்ந்தார்கள் இம்மக்கள். ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வேறு முகாமுக்கும், பெற்றோர்கள் வேறு முகாமுக்கும் என பிரித்து அனுப்பி ஆங்கில அரசு கொடூரமாக இம்மக்களை ஒடுக்கியது.

இந்நிலையில் 1933இல் இந்திய அரசியல் சட்டசீர்திருத்தக்குழு முன்னிலையில் இந்த சட்டம் குறித்து நடந்த விசாரணையில் பேசிய அண்ணல் அம்பேத்கர். இந்த சட்டத்தின் தீமையை விளக்கினார். இதனால் இந்த சட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுக்கே உண்டு என்று சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதன் விளைவாக சென்னை இராஜதானியில் ஆட்சிக்கு வந்த நீதிகட்சி வந்தவுடனேயே இந்த சட்டத்தை மாற்றியமைத்தது. முதல் கட்டமாக ஆப்பநாட்டு மறவர்களை இந்த சட்டதிலிருந்து நீக்கியது. படிப்படியாக இந்த சட்டத்தையே இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துவந்தது. 1947 ஜீன் 5ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தலைவரும் அப்போதைய சென்னை மாகாண உள்துறை தலைவருமான சுப்பராயன் இந்த சட்டத்தை முற்றிலும் ஒழித்தார்.

இந்த சட்டத்தை ஒழிக்க உயிர்தியாகம் செய்த 16பேரின் நினைவாக பெருங்காமநல்லூரில் நினைவுத்தூண் வைத்து அந்த ஈகியர்களுக்கு வருடந்தோறும் ஏப்ரல் 3ஆம் நாள் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply