டெல்லியை காவி பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டிடு! அனைத்து கட்சி, முற்போக்கு சக்திகளே இசுலாமியர்களுடன் துணைநில்லுங்கள்!

டெல்லியை காவி பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டிடு! அனைத்து கட்சி, முற்போக்கு சக்திகளே இசுலாமியர்களுடன் துணைநில்லுங்கள்!

பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்திட இணைவோம்!

– மே பதினேழு இயக்கம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அமைதியாகப் போராடி வரும் இசுலாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவி பயங்கரவாதக் கூட்டம் வெறியாட்டத்தினை துவங்கியுள்ளது. குஜராத்தில் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்ததைப் போல டெல்லியில் நிகழ்த்திட திட்டமிட்டு காவி பயங்கரவாத அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து தாக்கியும், தீயிட்டு கொளுத்தியும், மசூதிகளை சேதப்படுத்தியும் வருகின்றனர். டெல்லியிலிருந்தும் வெளிவரும் தாக்குதல் வீடியோ காட்சிகள், நாடு மிகப் பெரும் ஆபத்தில் உள்ளதைக் காட்டுகிறது. இந்த வன்முறையில் இதுவரையில் 18 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியப் பிரதமர் மோடி இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

காவி தீவிரவாதிகளின் கோரப்பிடியில் இந்தியாவின் தலைநகர் சிக்கியிருக்கிறது. இந்திய பாஜக அரசும், உள்துறை அமைச்சகமும் காவி பயங்கரவாதிகளின் வெறியாட்டத்தினை அனுமதித்து வேடிக்கை பார்த்து வருகிறது. இசுலாமியர்களை இனப்படுகொலை செய்யும் நோக்கோடு காவி கும்பல் நடத்தும் இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு உடந்தையாக செயல்படுவதையே இது காட்டுகிறது.

இசுலாமிய மக்களின் மீதான காவி கும்பலின் தாக்குதலை இரு பிரிவினருக்கு இடையிலான கலவரமாக சித்தரிக்க ஊடகங்களும், அரசும் முயல்கிறது. காவி பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் என்ற உண்மையை வெளிப்படுத்துவது முக்கியம். டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இத்தாக்குதலுக்கு காரணமான காவி கும்பலுக்கு எதிராக பேசாமல், இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகவே பேசி வருகிறார். தாக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் பக்கம் நின்று உண்மையைப் பேசுவதே நடுநிலை. ஆனால் கெஜ்ரிவாலின் அறிக்கை எந்தவிதத்திலும் வன்முறை கும்பலுக்கு எதிர்ப்பினை பதிவு செய்யவில்லை.

இசுலாமியர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்த திட்டமிடப்படுவதை தடுக்க அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், தொழிற்சங்கங்களும், மாணவர்களும் இசுலாமிய மக்களுக்கு பாதுகாப்பாக உறுதுணையாக நிற்க வேண்டும். இந்துக்கள், கிறித்தவர்கள் என மதவேறுபாடின்றி அனைத்து மதத்தினைச் சேர்ந்த மக்களும் இந்த நேரத்தில் இசுலாமிய மக்களுடன் இணைந்து நின்று காவி பயங்கரவாதத்திற்கு வலிமையான எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும்.

மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட அனைத்து மக்களும் காவி பயங்கரவாதத்தினை எதிர்த்து நிற்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

இனப்படுகொலை நிகழ்ந்திட நடக்கும் சதிக்கு துணைபோகும் பாஜக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply