டெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகம் அதிரவைக்கும் அறிக்கைகள்

டெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகம் அதிரவைக்கும் அறிக்கைகள்

சமீப நாட்களில் டெல்லியில் காற்று மாசு அதிகமென்ற செய்தி தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதையும் தாண்டி காற்று மாசு அதிகமுள்ள ஊர் சென்னை என்று மத்திய அரசின் அறிக்கைகளும் தனியார் நிறுவனங்களின் அறிக்கைகளும் சொல்கிறது.

நேற்று (07.11.19) காலையில் சென்னையின் பிரதான இடங்களான மணலி, அண்ணாநகர் வேளச்சேரி குடியிருப்பு பகுதி, ஆலந்தூர் பஸ் டிப்போ போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட காற்று மாசு கணக்கீட்டின் படி அதிகபட்சமாக மணலியில் 345µg/m³ (மைக்ரோ கிராம்ஸ் பெர் கியூபிக் மீட்டர்) இருந்திருக்கிறது. இது டெல்லியின் 264µg/m³ அளவை விடமிக அதிகம் என்று மத்திய காற்று மாசுக்கட்டுபாட்டுவாரியம் அறிவித்திருக்கிறது. அதேபோல
ஆலந்தூர் பஸ் டிப்போ = 331µg/m³
வேளச்சேரி குடியிருப்பு பகுதி = 340µg/m³ பதிவாகியிருக்கிறது. காற்று மாசு 51-100µg/m³. இருந்தால் மட்டுமே அது மக்களுக்கு எந்த பாதிப்பையும் தராது. அதைவிட அதிகமானால் மக்களுக்கு நுரையிரல் பாதிப்புகள் எற்பட வழிவகை ஏற்படும்.

இவ்வளவு பெரிய பிரச்சனையை சென்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை பற்றி தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் எந்த அறிக்கையும் தராமல் இருக்கிறது. கடைசியாக தமிழக மாசுகட்டுபாட்டு வாரிய இணையதளத்தில் சென்னை மாசு குறித்து நவம்பர் 4ஆம் தேதி பதிவானதே கடைசி அறிக்கையாக இருக்கிறதென்று இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இவ்வளவு பெரிய சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி மற்றும் இராயபுரம் ஆகிய வெறும் நான்கு இடங்களில் மட்டுமே காற்று மாசை கண்காணிக்கும் அட்டோமேடிக் நிலையங்கள் இருக்கிறதாம். அதுவும் செயலிழந்த (out-dated) இயந்திரங்களைக் கொண்டு தான் கணக்கீடும் நடக்கிறதாம். அதனால் தான் நேற்று கிண்டியில் காற்று மாசை அளவீடு செய்த போது தமிழக அரசின் அளவில் 160µg/m³. என்றும், மத்திய அரசின் அளவில் 260µg/m³ என்ற வித்தியாசம் ஏற்ப்பட்டிருக்கிறதென்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆக இது மற்ற பிரச்சனைகளை போல சாதாரணமாக கடந்து போய்விடக்கூடிய பிரச்சனையில்லை. மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது. ஆகவே தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மே பதினேழு இயக்கத்தில் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் கூடிய விரைவில் மருத்துவமனைகளை நோக்கி சென்னை மக்கள் படையெடுக்கும் காலம் வரும் என எச்சரிக்கின்றோம்.

மே 17இயக்கம்
9884072010

Leave a Reply