இந்திய பாஜக அரசே! தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயலாதே! உடனடியாக அந்த முயற்சியைக் கைவிடு!

இந்திய பாஜக அரசே! தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயலாதே! உடனடியாக அந்த முயற்சியைக் கைவிடு! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினை சந்தித்துள்ள புதிய கல்விக் கொள்கையை நவம்பர் இரண்டாம் வாரத்தில் இந்திய பாஜக அரசு அமல்படுத்தப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. புதிய கல்விக் கொள்கையை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி பல லட்சக்கணக்கான கடிதங்களை மக்கள் தேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் பழைய வரைவில் ஒரு சில சிறிய ஒன்றுக்கும் உதவாத திருத்தங்களை மட்டும் செய்துவிட்டு புதிய கல்விக் கொள்கை வரைவினை இறுதி செய்யும் முயற்சியில் பாஜக அரசு இறங்கியுள்ளது. அதற்காக அமைச்சரவை கூட்டத்தினைக் கூட்டி இறுதி அறிக்கையினை உறுதி செய்ய இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கல்வி உரிமை என்பது மாநிலங்களுக்கே சொந்தம் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் சத்தமில்லாமல் கல்வி அதிகாரத்தை பொதுப் பட்டியலிலிருந்து இந்திய ஒன்றிய அரசு பறித்துக் கொள்ள இருக்கிறது. இதுவே புதிய கல்விக் கொள்கையின் மிகப் பெரிய பிரச்சினையாகும்.

கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம் என அனைத்துக்கும் இந்திய அளவிலான நுழைவுத் தேர்வினை இக்கல்விக் கொள்கை திணிக்க உள்ளது. NEET தேர்வை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கையில் சத்தமில்லாமல் அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு இந்த கல்விக் கொள்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டுமென இக்கல்விக் கொள்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடை நிற்றலை இக்கொள்கை ஊக்குவிக்கிறது. 10ம் வகுப்பு முடித்தவுடனேயே ஏழை மாணவர்களை கல்லூரிப் படிப்பிலிருந்து மாற்றி தொழிற்கல்விக்கு அனுப்புவதையே இக்கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது.

கல்வியில் பன்னாட்டு கார்ப்பரேட் முதலீடுகளை இறக்குவதன் மூலம், கல்வி என்பது வியாபாரப் பண்டமாகி ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாற்றப்பட இருக்கிறது.

மேற்சொன்ன எந்த அம்சங்களிலும், எந்த மாற்றத்தையும் செய்யாமல், பெயருக்கு சிறிய திருத்தங்களை செய்துவிட்டு, மக்கள் கருத்தைக் கேட்டு திருத்தியுள்ளதாக பொய்யை சொல்லி மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை இறுதிப்படுத்த உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு நடைமுறைகளை ஏற்கனவே பல பெயர்களில் இந்திய அரசு நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டது.

இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மொழித் திணிப்பு இல்லை என்று சொல்லி விட்டு, ஆனால் மறைமுகமாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் வகையிலேயே கொள்கையினை ஒன்றிய அரசு அமைத்திருக்கிறது. இந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு மட்டும் பல கோடி செலவு செய்து பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்களை நியமிக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது. அப்படியிருக்க மும்மொழிக் கொள்கையில் எந்த மொழியை வேண்டுமானாலும் மூன்றாவது மொழியாக படிக்கலாம் என சொல்வதே ஒரு ஏமாற்று வேலையாகவே தெரிகிறது. மும்மொழிக் கொள்கை என்பது நீக்கப்பட்டு இரு மொழிக் கொள்கை என்பதே தொடரப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையையே தமிழர்கள் மீது திணிக்கிறது.

அதே போல் கல்வியை மாநில அரசிடமிருந்து பறித்து,மத்திய அரசின் வசமாக்கும் RSA என்ற மத்திய கல்வி ஆணையம் உருவாக்கப்படுவதை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்தன. அதை மாற்றுவதாக சொல்லிவிட்டு, ஆனால் அதன் தலைமைப் பொறுப்பை மட்டும் பிரதமரிடமிருந்து மாற்றி தேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் கொடுத்துவிட்டு மாற்றத்தை செய்துவிட்டதாக பாஜக அரசு தெரிவிக்க இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை வரைவு என்பதை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. மாநில அரசிடமிருந்து கல்வி உரிமையை மத்திய அரசு பறிக்க நினைப்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும். மக்கள் போராடிக் கொண்டிரும்போதே அவர்களை ஏமாற்றி விட்டு, நவம்பர் மாதத்திற்குள் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய நினைப்பது ஒரு நேர்மையான அரசின் செயலாக இருக்க முடியாது.

இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி இந்தியாவையே உற்றுப் பார்க்க வைத்த வரலாறு தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பதை பாஜக அரசு மறந்துவிடக் கூடாது. தேசிய கல்விக் கொள்கை எனும் அநீதியை நடைமுறைப்படுத்தும் முயற்சியை உடனடியாக இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பினை பாஜக அரசு சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,

-மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply