ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்யக் கோரிய தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்திருப்பது சட்ட விரோதமானது 

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்யக் கோரிய தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்திருப்பது சட்ட விரோதமானது 


28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்திட மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார்கள்.

பேரறிவாளன் அவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய விசாரணை அதிகாரி தியாகராஜன் 25 ஆண்டுகள் கழித்து, பேரறிவாளன் சொன்ன வாக்குமூலத்தை தான் முழுமையாக எழுதவில்லை என்று ஒப்புதல் அளித்திருக்கிறார். ராஜீவ் கொலை குறித்து தமக்கு தெரியாது என்று பேரறிவாளன் சொன்னதை எழுதாமல் விட்டதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

ராஜீவ் கொலையின் பின்னுள்ள சர்வதேச சதிகளையும், அவற்றில் சுப்ரமணிய சுவாமி, சந்திராசாமி உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பதாகவும் பல்வேறு அறிக்கைகள் உறுதி செய்திருக்கின்றன.

உண்மைகள் இப்படியிருக்க, ஏழு நிரபராதித் தமிழர்கள் சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு முழுதும் மக்கள் போராடி வருகிறார்கள். ஏழ்வரையும் மாநில அரசு விடுதலை செய்வதில் எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றமும் அறிவித்து விட்டது.

தமிழ்நாடு அரசு அமைச்சரவையைக் கூட்டி ஏழ்வரையும் விடுதலை செய்யும் ஆணையை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டது. அப்படியிருந்தும் ஆளுநர் விடுதலை உத்தரவில் கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வந்தார். அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்பு தெரிவிக்க வேண்டிய ஆளுநர் தனது அதிகாரத்தினை மீறி ஏழ்வரின் விடுதலை உத்தரவை தற்போது நிராகரித்திருக்கிறார். ஏழ்வர் விடுதலைக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசிற்கு ஆதரவாகத் தான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் உத்தரவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் மறுப்பதென்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது. மக்களின் குரலுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் குரலுக்கும் கட்டுப்பட்டு உடனடியாக ஏழ்வரையும் விடுதலை செய்திட ஆளுநர் ஒப்புதல் அளிப்பதே நேர்மையானதாக இருக்க முடியும். பாஜக அரசிற்கு ஆதரவாக செயல்படும் ஆளுநரின் சர்வாதிகாரப் போக்கினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply