மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படும் சதிவெறியால் நடக்கும் சாதிவெறி தாக்குதல்கள்! உடனே களையப்பட வேண்டும்

மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படும் சதிவெறியால் நடக்கும் சாதிவெறி தாக்குதல்கள்! உடனே களையப்பட வேண்டும். – மே பதினேழு இயக்கம்

மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றியம் மறவன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் சரவணகுமாரை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர் மோகன்ராஜ் சாதி பெயரைச் சொல்லி திட்டி ப்ளேடால் முதுகைக் கிழித்திருக்கிறார். பள்ளி மாணவர்களிடையே நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது பல்வேறு சாதி ரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிகிறது.

மோகன்ராஜ் சரவணக்குமாரின் பள்ளி பையினை மறைத்துவைத்து விட்டு, தேடவிட்ட காரணத்தினால், அதை எதிர்த்துப் பேசிய சரவணக்குமாரின் முதுகினை கையில் வைத்திருந்த ப்ளேடால் கிழித்திருக்கிறார் மோகன்ராஜ்.

பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதி வெறியினை வளர்த்தெடுக்கும் சதியினை சாதிய அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. மாணவர்களிடையான சிறு சிறு முரண்களை சாதிவெறியாக கூர்தீட்டி அவர்களை வன்முறையாளர்களாக மாற்றும் வேலையினை ஆதிக்கத்தை முன்வைக்கும் சாதிவெறி சங்கங்கள் செய்து வருகின்றன.

கலாச்சாரக் குறியீடு என்ற பெயரில் சாதிப்பெருமையை வெளிப்படுத்தும் வண்ணக் கயிறுகளை கட்டிவிடும் மோசமான நடைமுறை பல்வேறு பள்ளிகளில் இன்னும் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக விரும்பிகள் அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற போது, அடுத்த தலைமுறை மாணவர்களிடமும் சாதிவெறி என்பது சமூக விரோத சக்திகளால் புகுத்தப்படுகிறது. சாதிவெறியை மாணவர்கள் மத்தியில் திணக்கிற சாதிவெறி அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.

மாணவர்களிடையே சாதிப்பெருமையை வளர்த்து விட்டு, சாதிவெறியைத் தூண்டும் நபர்கள் யாராயினும் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

மாணவர் சரவணக் குமாரின் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களை தமிழக அரசு தண்டிக்க வேண்டும். சாதி ஒழிப்பின் தேவையையும், சமத்துவ நடைமுறையினையும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். சமூக விரோத சக்திகளின் கைகளிலிருந்து அடுத்த தலைமுறை பாதுகாக்கப்பட வேண்டும். சாதி என்பது குற்றமாக்கப்பட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply