கும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை

கும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

உள்ளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டினை அரசு தலையிட்டு தடுப்பதென்பது ஒரு மோசமான சர்வாதிகாரப் போக்கினையே காட்டுகிறது. சமீப காலங்களில் உள்ளரங்குகளில் நடத்தக் கூடிய நிகழ்வுகளிலும் அரசு தலையிட்டு அனுமதி பெற வேண்டும் என சொல்லி தடுப்பதும், அரங்கு உரிமையாளர்களை மிரட்டுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. ஜனநாயகத்தை கொலை செய்யும் போக்குடன் தமிழக அரசு நடந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வியினையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

மாநாட்டில் உரையாற்றுகின்ற தலைவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசுவார்கள் என்றும் ரகசிய தகவல் கிடைத்திருப்பதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை அனுமதி மறுப்பு அறிக்கையினை தெரிவித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்துப் பேசினாலே சட்டம் ஒழுங்குக்கு எதிரானது என்று சொல்வது என்ன மாதிரியான நிலைப்பாடு? நாம் என்ன ஹிட்லரின் ஆட்சியிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
காவிரி டெல்டாவினை பாலைவனமாக்கக் கூடிய மிக மோசமான ஹைட்ரோகார்பன் திட்டத்தினைக் குறித்து பேசவே கூடாது என்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்.

இந்த அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, சட்டப் போராட்டம் நடத்தி, மக்களின் துணையுடன் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு மீண்டும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும்.
மாநாட்டினை தடுக்கும் மோடி-எடப்பாடி அரசின் அடக்குமுறையினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply