மருத்துவர் ரமேஷ் அவர்களின் மனைவி சோபானா அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை மே 17 இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது

கோவையைச் சேர்ந்த செயல்பாட்டாளர் மருத்துவர் ரமேஷ் அவர்களின் மனைவி சோபனா அவர்கள் விபத்தில் மரணமடைந்திருக்கிறார்.

மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் போது, ஆனைக்கட்டி மலைப்பகுதி சாலையில் டாஸ்மாக்கில் குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்தவர்கள் மோதியதால் அவர் இறந்திருக்கிறார். அவரது மகளும் படுகாயமடைந்திருக்கிறார்.

இந்த நிலையில் மருத்துவர் ரமேஷ் டாஸ்மாக் கடையினை மூட வலியுறுத்தி தன் மனைவியின் உடலுடன் சாலையிலேயே அமர்ந்து மக்களின் ஆதரவுடன் இரவு முழுவதும் போராடியிருக்கிறார். 
மகளை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு மருத்துவர் ரமேஷ் தன் மனைவியின் உடலை வைத்து போராடியிருக்கிறார்.

மருத்துவர் ரமேஷ் அவர்களும், அவரது மனைவியும் தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் மருத்துவர் ரமேஷ்.

தமிழக அரசின் டாஸ்மாக்கினால் இன்று தமிழ்ச்சமூகம் ஒரு செயல்பாட்டாளரை இழந்து நிற்கிறது.

தமிழகத்தில் நடக்கும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு டாஸ்மாக் சாராயக் கடைகளே காரணமாக இருக்கின்றன.

தமிழக அரசே! மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாய் இருக்கிற டாஸ்மாக் சாராய கடைகளை இழுத்து மூடு!

மருத்துவர் ரமேஷ் அவர்களின் மனைவி சோபானா அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை மே பதினேழு இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply