தோழர் வேல்முருகன் அவர்கள் முன்வைத்த #GobackNLC எனும் முழக்கத்தினை வலுப்படுத்துவோம்

NLC எனும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் எனும் இந்திய அரசு நிறுவனம் புதிதாக நிலங்களை கையப்படுத்தி உருவாக்க இருக்கும் மூன்றாவது சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிப்போம். என்.எல்.சி நிறுவனம் இதுவரை தமிழக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியதில்லை. நிலத்தை கொடுத்த மக்களுக்கு வேலை வாய்ப்பையும், நிரந்தர வேலையையும் கொடுத்ததில்லை. மாறாக வடநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், தமிழக தொழிலாளர்களை ஒப்பந்த ஊழியராக வைத்துக் கொள்ளுதல், குறைந்த ஊதியம் அளித்தல் என்று அயோக்கியத்தனத்தை செய்து வருகிறது, போராடிய மக்களை கடுமையான ஒடுக்குமுறையை கட்டவிழ்ப்பது, காவல்துறையை வைத்து துப்பாக்கியில் சுட்டுக்க்கொல்வது என்பதும் நடந்திருக்கிறது. தற்போது 40 கிராமங்களுக்கும் அதிகமான பகுதிகளில் இருந்து நிலங்களை ஆக்கிரமிக்க முயல்கிறது. ஏற்கனவே 10000க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி பயன்படுத்தாமல் வைத்திருக்கிறது இந்நிறுவனம். சென்னை வெள்ளத்தின் போது இந்நிறுவனம் அதிகப்படியான நீரை முன் அறிவிப்பில்லாமல் வெளியேற்றிய போது 8பேர் இறந்து போனது நம் நினைவில் இன்றும் நிற்கிறது.

இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பிற மாநில அதிகாரிகள் அமர்த்தப்படுவதும், அந்த அதிகாரிகள் தமிழக தொழிலாளர்களை இரண்டாம் தர ஊழியர்களாக நடத்துவதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஏற்கனவே ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு நட்ட ஈட்டை வழங்கவும் இல்லை, வேலை வாய்ப்பினை கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் இந்த மத்திய அரசு நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கப்பணிக்காக மக்களின் நிலங்களை கையகப்படுத்த முனைவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் தோழர். வேல்முருகன் அவர்கள் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தினை 24-12-2018இல் துவக்கினார். தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர். வேல்முருகன் அவர்களின் போராட்டத்திற்கு அக்கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பான மே 17 இயக்கம் ஆதரவை தெரிவிக்கிறது, இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஆதரித்து வலிமைப்படுத்தும். மேலும் இப்போராட்டங்கள் வலிமை பெற அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென்று மே 17 இயக்கம் வேண்டுகோள் வைக்கிறது. தோழர் வேல்முருகன் அவர்கள் முன்வைத்த #gobackNLC எனும் முழக்கத்தினை நாமும் வலுப்படுத்துவோம்.

தமிழர்களின் நிலங்களை சுரண்டிக் கொழுக்கும் நிறுவனங்கள், தமிழர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் போக்கினை தடுத்து நிறுத்திடுவோம்.

அனைவரும் பின்வரும் வாசகத்தை வலிமைப்படுத்தவும்.
#gobackNLC

Leave a Reply