TNPSC குரூப்-2 தேர்வில் சில பாடங்களின் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

- in அறிக்கைகள்​, மே 17

TNPSC குரூப்-2 தேர்வில் அரசியல் அறிவியல்(Political Science), சமூகவியல் (Sociology) உள்ளிட்ட சில பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்றும், ஆங்கிலத்தில் தான் கேட்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. – மே பதினேழு இயக்கம்

அரசியல் அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களில் தகுதி பெற்ற பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும், தமிழில் அந்த கேள்விகளை மொழிப்பெயர்த்து அளிக்க போதுமான பேராசிரியர்கள் இல்லை என்றும் TNPSC நிர்வாகம் அறிவித்திருப்பது போலியான மற்றும் அவமானகரமான விடயமாகும். தமிழ் வழியில் படித்தவர்களை திட்டமிட்டு சமூக விலக்கம் செய்யும் முடிவாகவே இதனைப் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு இணைந்த கேள்வித்தாளை எழுதுவதற்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் தமிழ்வழியில் படித்த கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள். பெரும்பாலோனோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அரசுப் பணியாளர்களாக மாறுவதுதான் கிராமப்புறங்களை முன்னேற்றும் சமூக நீதியாக இருக்கும்.

1199 பணி இடங்களுக்கு நடக்கும் இத்தேர்வில், சில குறிப்பிட்ட பாடங்களுக்கான வினாக்களை தமிழில் அளிக்க மறுப்பதென்பது, தமிழ் வழியில் படித்த ஏழை மாணவர்களையும், இளைஞர்களையும் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் சதியே ஆகும்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அரசுப் பணிக்கான TNPSC தேர்வினை தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களைச் சேர்ந்தோரும் எழுதலாம் என்று அறிவித்ததின் பின்னணியில் இருந்து இந்த சதியினை பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் அரசுப் பணிகளில் தமிழர்களை நீக்கிவிட்டு மற்ற மாநிலத்தவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் ரீதியில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரத்தில் இருப்பவர் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அரசின் ஆணைகளை செயல்படுத்தும் அடியாளாக தமிழ்நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தினை மேற்கொண்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த வாரம் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில், தற்போது வெறும் வாய்மொழியாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பினை தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழில் கேள்விகளை மொழிப்பெயர்க்கவும், தயாரிக்கவும் பேராசிரியர்கள் இல்லை என்று தெரிவித்திருப்பது வெட்கக் கேடானதும், அயோக்கியத்தனமானதும் ஆகும்.

தமிழில் கேள்வித்தாள் முழுமையாக தயாரிக்கப்பட்ட பிறகுதான் குரூப்2 தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. உடனடியாக தயாரிக்க முடியாவிட்டால் தேர்வுகளை ஒத்திவைப்பதே சரியானது. முழுமையாக கேள்வித்தாள் தமிழில் வராவிட்டால் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்து தமிழ்நாட்டின் உரிமையினைக் காக்கும், ஜனநாயகப் போராட்டத்தினை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உடனடியாக தமிழக அரசு, முழுமையாக தமிழில் கேள்வித்தாளை உருவாக்கிடும் உறுதிமொழியினை வழங்கிட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply