பெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு!

- in பரப்புரை
**பெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு!**

உண்மையிலேயே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இவ்வளவு உயரும் நிலைக்குத் தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மதிப்பு இருக்கிறதா?

இல்லை என்பதே பதில்.

நம்மிடம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரியை மட்டுமே வாங்கிக் கொண்டு, அவற்றை இலவசமாகவே நமக்கு இந்திய அரசு வழங்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

முடியும் என்பதே உண்மை. ஏனென்றால் வரி என்ற பெயரில் பெட்ரோலின் விலையைக் காட்டிலும், மிகப் பெரும் பணம் நம்மிடமிருந்து இந்திய அரசால் எடுக்கப்படுகிறது.

இவற்றை மேலும் புரிந்து கொள்ள சில விவரங்களைப் பார்ப்போம்.

2015-16 ஆம் ஆண்டின் கணக்குகளின் படி,
இந்திய அரசு இறக்குமதி செய்த பெட்ரோலியப் பொருட்களின் அளவு 247.73 மில்லியன் மெட்ரிக் டன்.
அவற்றின் மொத்த விலை மதிப்பு(எண்ணெய், எரிகாற்று, பெட்ரோலிய பொருட்கள் உட்பட) = 5,27,765 கோடி
(Source: 2015-16 Ministry of petroleum and natural gas Golden Jublee Report)

******************************************************************
எரிபொருள் இறக்குமதி தரவுகள்:
————————–————————-
எண்ணெய் – 202.85 மில்லியன் மெட்ரிக் டன் – 4.16 லட்சம் கோடி

எரிகாற்று – 16.58 மில்லியன் மெட்ரிக் டன் – 45,601 கோடி

பெட்ரோலிய பொருட்கள் – 28.3 மில்லியன் மெட்ரிக் டன் – 65,803 கோடி
————————–————————–
மொத்தம் – 247.73 மில்லியன் மெட்ரிக் டன் – 5,27,765 கோடி
******************************************************************

இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. 60.54 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களின் விலை மதிப்பு = 1,76,773 கோடி

ஆக, எண்ணெய் பொருட்களை வாங்குவதற்காக இந்திய அரசு செலவிடும் நிகர இறக்குமதி செலவு (இறக்குமதி – ஏற்றுமதி)
*5,27,765 கோடி – 1,76,773 கோடி = 3,50,992 கோடி*

பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்காக மக்களிடம் பெறப்படும் வரிகள் மூலமாக அரசு பெறும் வருமானத்தின் தொகை (எண்ணெய் ராயல்டி, எரிகாற்று ராயல்டி, எண்ணெய் மேம்பாட்டு வரி, சுங்கம் மற்றும் எக்சைஸ் வரி, விற்பனை வரி) = 3,78,068 கோடி
(Source: 2015-16 Ministry of petroleum and natural gas)

*******************************************************************
பெட்ரோலிய வரி தரவுகள்:
————————–—————-
எண்ணெய் ராயல்டி – 13,916 கோடி
எரிகாற்று ராயல்டி – 2,855 கோடி
எண்ணெய் மேம்பாட்டு வரி – 15,854 கோடி
சுங்கம் மற்றும் எக்சைஸ் வரி – 2.14 லட்சம் கோடி
விறபனை வரி – 1.14 லட்சம் கோடி
————————–—————–
மொத்தம் – 3.78 லட்சம் கோடி
*******************************************************************

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெட்ரோலிய பொருட்களை வாங்கி இறக்குமதி செய்வதற்கு செலவிடும் தொகையினை, அவற்றின் மீதான வரிகளின் மூலமாகவே இந்திய அரசு பெற்றுவிடுகிறது.

இன்னும் சொல்லப்போனால் நிகர செலவுத் தொகையான 3,50,992 கோடியை விட, வரி வருமானமான 3,78,068 கோடி என்பது 28,000 கோடி அளவுக்கு அதிகமானதாகும். ஆக, வெறும் வரிகளின் மூலமாகவே 28,000 கோடி லாபத்தினை இந்திய அரசு பெறுகிறது.

இது இல்லாமல் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு ஆகும் செலவினையும் அரசு மக்கள் தலையில் தான் கட்டுகிறது. இந்திய அரசு பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கான மொத்த விலை மதிப்பையும், லாபத்துடன் சேர்த்து வரிகளின் மூலமாகவே மொத்தமாக மக்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், வெறும் வரிகளை மட்டும் மக்களிடம் வாங்கிக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலை இலவசமாகவே மக்களுக்கு கொடுக்க முடியும். அப்போதும் அது இந்திய அரசுக்கு லாபமாகவே நிற்கும்.

அப்படி என்றால் இந்த விலையேற்றம் யாருக்காக?
வரியையும் கொடுத்துவிட்டு, பெட்ரோலியத்தின் அடக்க விலைக்கான பணத்தையும் மக்களிடமிருந்து இந்திய அரசு கட்டாயமாக பெற்றுக் கொள்கிறது. இந்த அதிகபட்ச விலை மதிப்பு என்பது மக்கள், அரசுக்கு இலவசமாக மானியம் அளிப்பதைப் போன்றதாகும். மக்கள் அரசுக்கு அளிக்கும் இந்த இலவச மானியத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு, அரசு வழங்குகிற மானியங்களைப் பற்றித் தான் அதிகாரவர்க்கம் அதிகம் கவலைப்படுகிறது. அந்த மானியங்களுக்கு ஆகும் செலவைத் தான் நாட்டின் கடன்களுக்கான முக்கிய காரணமாகக் காட்டி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதாரவியலாளர்கள்.

பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மூலமாகவே மிகப் பெரும் வருமானத்தினை இந்திய அரசு பெற்று பயனடைந்து வருகிறது. அதனூடாக வரும் வருமானங்களை வைத்து தான், அம்பானி, அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகள் தராமல் ஏமாற்றிய, பெரும் பணத்தினை இவர்கள் ஈடுகட்டுகிறார்கள். அம்பானிக்காக சாமானியனின் பணத்தைப் பிடுங்குகிறார்கள்.

ரேசன் கடைகள், விவசாய மானியங்கள் உள்ளிட்ட, மக்கள் நலத் திட்டங்களின் மானியங்கள் அனைத்தையும் WTO ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைத்து விட்டு, நாட்டின் செலவைக் குறைப்பதாக இந்திய அரசு நாடகமாடி வருகிறது. அப்படி என்றால் பெட்ரோலியத்தினை அநியாய விலைக்கு சாமானிய மக்களிடம் விற்று கொள்ளை லாபம் பார்ப்பது யாருடைய நலனுக்காக? அமெரிக்க, பிரெஞ்சு ஆயுத நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை போட்டு, ஆயுதங்களை வாங்கிக் குவித்து கொள்ளை லாபம் பார்ப்பதற்கா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னணியில் சாமானியரின் பணத்தைப் பிடுங்கி, நாட்டின் வருமானத்தை உயர்த்தி, கார்ப்பரேட்டுகளின் வயிற்றை வளர்க்கும் யுக்தி இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னணியில் இருக்கும் அதீத வரி விதிப்பினையும், அரசியலையும் புரிந்து கொள்வோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply