பாசிசத்தின் வளர்ச்சி முழக்கத்தினூடாக அகதிகளாக்கப்பட்டு துரத்தப்படும் தொழிலாளிகள்

- in பரப்புரை

பாசிசத்தின் வளர்ச்சி முழக்கத்தினூடாக அகதிகளாக்கப்பட்டு துரத்தப்படும் தொழிலாளிகள்

கடந்த ஒரு வாரமாக குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்தி பேசுகின்ற தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலோனார் உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

குஜராத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து இந்த வெறுப்புப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு தாக்குதல்கள் இந்தி பேசும் முறைசாரா தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட நிலையில், 50,000க்கும் அதிகமானோர் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறியிருக்கிறார்கள்.

பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள், அவர்களை வெளியேற வேண்டாம் என பிரச்சாரம் செய்த போதிலும் இந்த வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. White Collar Jobs என்று சொல்லப்படக் கூடிய உயர் தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தி பேசுபவர்களுக்கோ, அல்லது குஜராத்தின் ஏழை மக்களின் வளங்களை சுரண்டும் பிற கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கோ இத்தாக்குதல்கள் நிகழவில்லை.

அடித்தட்டு உழைக்கும் வேலைகளை செய்யக் கூடிய தொழிலாளிகளே வெளியேறுகின்றார்கள். இந்தி மொழி வளர்ச்சிக்காக என்று சொல்லி ஆயிரக்கணக்கான கோடிகளை வாரி இறைக்கும் இந்திய அரசு, இந்தி பேசும் தொழிலாளர்களின் பொருளாதார நிலையை அகதிகளாக வெளியேறும் நிலைக்குத் தான் வைத்திருக்கிறது.

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கக் கூவிடும் பாசிசத்தின் தேசபக்தி முகமூடி இங்குதான் கிழிந்து தொங்குகிறது. இந்தி பேசுகின்ற பீகார், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான வேலைவாய்ப்பையோ, பணிப்பாதுகாப்பையோ வழங்காமல் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் Contract கூலிகளாக விரட்டுகிற இந்த அரசுதான் இந்தியா ஒளிர்வதாகவும், வல்லரசாவதாகவும் கூவிக் கொண்டிருக்கிறது.

இவர்களின் வளர்ச்சி முழக்கங்கள் எத்தனை கேவலமானது என்பதை இந்தி பேசும் அப்பாவி தொழிலாளர்களின் நிலையிலிருந்துதான் நாம் அறிந்து கொள்ள முடியும். அம்பானிக்கும், அதானிக்கும், பிற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரை அடிமைகளாக இருந்து வேலை செய்வதற்காகவே பிறந்தவர்களாகத் தான் பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களின் தொழிலாளர்களை இந்திய அரசு வைத்திருக்கிறது.

ஒரு தொழிலாளிக்கான எந்த உரிமையும் மதிக்கப்படாமல் தான், பழங்கால ஆப்ரிக்க கருப்பின அடிமைகளைப் போல இவர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு கூலிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். நாடு முழுதும் வதை முகாம்களைப் போன்ற வாழ்விடங்களில் இவர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில உரிமைகளைப் பேசுபவர்களையும், கார்ப்பரேட் பயங்கரவாதத்தை எதிர்த்து பேசுபவர்களையும் Anti Indians என்று சொல்லும் பாசிச அரசின் ஆட்கள், இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்கிற இந்தி பேசும் தொழிலாளர்களுக்கு நடக்கிற கொடுமையைப் பற்றி பேசுவதில்லை. சொந்த மாநிலங்களில் அவர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்குவதைக் குறித்துப் பேசுவதில்லை. அவர்களை விரட்டுகிற வெறுப்புப் பிரச்சாரத்தினை முன்னெடுக்கிற குஜராத்தின் இனவெறி கும்பலை தேசவிரோதிகள் என்று சொல்வதில்லை.

தேசபக்தியோ, வளர்ச்சியோ எந்த முழக்கத்தை முன்வைத்தாலும் பாசிசம் என்பது உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதையே நாம் பார்க்க முடியும்.

வெளியேறிக் கொண்டிருக்கும் தொழிலாளிகளில் பெரும்பாலோனார் இந்து மதத்தினைச் சார்ந்தவர்கள் தான், இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வோர்தான், இந்தி மொழி பேசுபவர்கள்தான். இந்தி-இந்து-இந்தியா என்ற முழக்கத்தை முன்வைக்கும் ஆட்சியை நடத்துகிற குஜராத்தின் பாரதிய ஜனதா கட்சியின் முழக்கங்கள் எத்தனை போலியானது என்பதும், இந்த ஒற்றைவாத பாசிச முழக்கம் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கானதே தவிர மக்களுக்கானதல்ல என்பதே இப்போது அம்பலப்பட்டு நிற்கிறது.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply