தமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!

தமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!
பாதுகாத்திட குரல் கொடுப்போம்!!

மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில், வைகை ஆற்றங்கரையில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரம் புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அகழாய்வு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வினை மேற்கொண்டு வந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பலவற்றை வெளிக்கொண்டு வந்தார். மேலும் கீழடியில் வேதங்கள் தொடர்பான குறியீடுகளோ, புராண உருவ வழிபாட்டு சிலைகளோ இல்லை என்றும், தமிழர்களின் மதச்சார்பின்மையை வெளிப்படுத்தும் பல்வேறு வரலாற்று உண்மைகளை சொன்னார். இதன் காரணமாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென் கீழடியிலிருந்து அசாமிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீராமன் என்பவரை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை நியமித்தது.

கீழடி ஆய்வினை மூடிமறைக்கும் இச்செயலை எதிர்த்து, மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மாவின் கீழடி வருகையின் போது கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தினை மே பதினேழு இயக்கம் தோழமை இயக்கங்களை ஒருங்கிணைத்து நடத்தியது.

பின்னர் பல்வேறு அழுத்தங்களின் விளைவாக 4ம் கட்ட அகழாய்வினை கீழடியில் தொல்லியல் துறை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தியது. 2014ம் ஆண்டிலிருந்து தான் செய்த ஆய்வுகளை இடைநிலை அறிக்கையாக அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சமர்ப்பித்தார். அவரது இறுதி அறிக்கையினை சமர்ப்பிக்க சமீபத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தடை விதித்தது. அகழாய்வுத் துறையின் இயக்குநர் வி.என்.பிரபாகர் இது குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, கீழடி ஆய்வறிக்கை குறித்து, இதற்குப் பிறகு நீங்கள் எந்த தகவலும் அளிக்கத் தேவையில்லை என்றும் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என்ற ரீதியிலும் ஒரு கடிதத்தினையும் அனுப்பியுள்ளார்.

கீழடி அகழாய்வினை கண்டுபிடித்ததிலிருந்து தொடர்ச்சியாக வேலை செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை இடமாற்றம் செய்ததோடு, அவரை அறிக்கை அளிக்கவிடாமல் தடுப்பதென்பதும் தமிழரை வரலாற்றை மறைக்கவும், தமிழர் வரலாற்றை பார்ப்பனியமயப் படுத்தவும் செய்யும் சூழ்ச்சியாகவே இதனை பார்க்க முடிகிறது.

கீழடி ஆய்வு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கனிமொழிமதி, பிரபாகர் பாண்டியன் ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த நீதிபதிகள், அக்டோபர் 31ம் தேதிக்குள் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக அரசு நீதிமன்றத்தில், கீழடியில் தங்க ஆபரணங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், பழங்கால விலங்குகளின் எலும்புகள், மீன் உருவம் பொறித்த பானைகள் போன்ற 7000க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதனை கலிஃபோர்னியாவிற்கு அனுப்பி கால நிர்ணய ஆய்வு சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது வரை, கீழடியில் வேத குறியீடுகளோ, ஆரிய மத குறியீடுகளோ எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், கீழடி வரலாறு முழுமையாக வெளியே வந்தால், இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டி வந்துவிடுமோ என்று பார்ப்பனியம் விழிபிதுங்கி நிற்கிறது. இதன் காரணமாகத் தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வின் முடிவுகள் இன்று வரை வெளிவரமால் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் கீழடி ஆய்வினைப் பாதுகாப்பதென்பது மிகவும் முக்கியமானதாகும். கீழடி ஆய்வினை பாதுகாப்பதென்பது நம் வரலாற்றைப் பாதுகாப்பது. நம் வரலாற்றை வேறெவனும் திரித்துவிடாமல் இருக்கச் செய்வதற்கான மிக முக்கியமான வேலையாகும். கீழடி ஆய்வினை முழுமையாக, உண்மையாக வெளிக்கொண்டுவர நாம் மிக கவனமாக இருப்பது முக்கியம்.

* கீழடி ஆய்வில் பல்வேறு தடங்கல்களை செய்து கொண்டிருக்கும், இந்திய தொல்லியல் துறை(Archaeological Survey of India) மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.

* இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையிலான தொல்லியல் பொருட்களும், அகழாய்விடங்களும், கல்வெட்டுகளும் தமிழ்நாட்டில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தென்னிந்திய தொல்லியல் ஆய்வு மையத்தின் தலைமையகம் தமிழ்நாட்டில் அமைக்கப்படாமல், பெங்களூரில் இருப்பதென்பது முரணானதாகும். தமிழ்நாட்டில்தான் அது அமைக்கப்பட வேண்டும்.

* கண்டெடுக்கப்படுகின்ற தொல்பொருட்களை ஆய்வு செய்து பாதுகாக்கும் உரிமை மத்திய தொல்துறைக்கு வழங்கப்படக் கூடாது. மாநில தொல்லியல் துறையிடம்தான் வழங்கப்பட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply