தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

- in பரப்புரை
தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“அவர் செய்த குற்றம் ஜெனிவாவில் நடந்த அய்.நா. கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்துப் பேசியதுதான்.” இது வன்மையான கண்டனத்துக்குரியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தினார்கள். உயிர்ப்பலி தந்து அரசைப் பணியவைத்து ஆலையை மூடினார்கள்.இப்போது ஸ்டெர்லைட் ஆலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“பசுமைத் தீர்ப்பாயம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தனது நிர்வாகப் பணிகளை தொடங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. உற்பத்தியைத் தொடங்க கூடாதாம்; ஆனால் நிர்வாகப் பணியைத் தொடங்கலாமாம். உற்பத்தி தொடங்காமல் என்ன நிர்வாகப் பணி இருக்கப்போகிறது என்று நமக்குத் தெரியவில்லை.”

பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது திடீரென்று எதனால் அதன் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? இதன் பின்னணியை நாம் பார்க்க வேண்டும். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக இப்போது நியமிக்கப்பட்டிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான கோயல் என்பவர். இந்த கோயல் தலைமையிலான நீதிமன்ற அமர்வுதான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மிகப்பெரிய ஓட்டைகளைப் போட்டது. அதுதொடர்பாக போடப்பட்ட மறுசீறாய்வு மனுக்களையும் இதே அமர்வுதான் தள்ளுபடி செய்தது.

அதற்கு முன்பாக வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தில் மிகப்பெரிய ஓட்டைகளைப் போட்டு அதை எந்திரத் தனமாக பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததும் இதே தலைமையிலான அமர்வுதான்.நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் பகவத் கீதை பள்ளி, கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக வைத்திருப்பேன் என்று சொன்னவர் கோயல். பாரதிய ஜனதா கட்சியின் நேரடி பரிந்துரையின் பேரில் உச்ச நீதமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.

நீதிபதியாக இருந்த ஓய்வுபெற்ற உடனேயே அவருக்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவி காத்திருந்தது. இப்போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தூத்துக்குடியில் ஸ்டெர்லெட் ஆலை இயங்குவதற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அங்கு உயிர்ப்பலி தந்த மக்கள் அவர்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கிற சூழ்நிலையை அதிகார வர்க்கம் உருவாக்கியுள்ளது. இதைத் தட்டிக் கேட்டால் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்திருக்கிறார்கள்.

போராடிய மக்கள் உணர்வுகளை இப்படி அதிகார வர்க்கம் மிதித்துக் கொண்டிருப்பதிலேயே இந்த நாட்டில் அதிகார வர்க்கம் எப்படி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது; அதுவும் பார்ப்பன அதிகார ஆதிக்கம் எப்படி கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது; அதை வைத்துக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலைகள் எப்படி மீண்டு வந்துகொண்டிருக்கிறது என்பதை மக்கள் நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“திருமுருகன் காந்தியின் கைதுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.”

– தோழர்.விடுதலை இராசேந்திரன்,
பொதுச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம் .

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கும், தோழர்களுக்கும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply