மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைது ஜனநாயக படுகொலை! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

- in பரப்புரை
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைது ஜனநாயக படுகொலை! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின்ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

தமிழக வளங்களை பாதுகாப்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராகவும், ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி வரும் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமானம் மூலம் இன்று நாடு திரும்பினார். அவர் பெங்களூர் விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இத்தகைய ஜனநாயக விரோத கைதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் திருமுருகன் காந்தியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முன்பும் அவர் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்துள்ளனர். நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்தது தேச விரோத செயலா என்பதை தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும். சமீப காலமாக தமிழக மக்களின் உரிமைக்காக போராடும் பல்வேறு இயக்க தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கை தொடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்குரியது. இது போன்ற செயலை தமிழக அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அது போன்று மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படிக்கு

ஊடக ஒருங்கிணைப்பாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலத் தலைவர் திரு.எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Leave a Reply