திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு தி.வேல்முருகன் அவர்கள் அறிக்கை

- in பரப்புரை

திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

கொடிகட்டிப் பறக்கும் மனித உரிமை மீறல் மற்றும் அடக்குமுறை தர்பார்!
திருமுருகன் காந்தி கைது!

இதனை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட அவரை உடனடியாக விடுவிக்குமாறு எச்சரிக்கிறோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் துப்பாக்கிச்சூடு, சேலம்-படப்பை எட்டுவழிச்சாலை ஆகிய பிரச்னைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு நார்வேயில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமானநிலையம் வந்தடைந்தார் திருமுருகன் காந்தி. அப்போது அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி விமானநிலையத்தில் அவரை சிறைப்பிடித்துள்ளனர்.

சென்னை வேப்பேரி, மைலாப்பூர் காவல்நிலையங்களில் அவருக்கு எதிராக 124 (A) தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறை திருமுருகன் காந்தியை கைது செய்ய பெங்களூரு விரைந்துள்ளனர்.

இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பியபோது, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே 17 இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நா.வில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எனக் குறிபிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோதக் கைதுகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறை கொடிகட்டிப் பறப்பதையே காட்டுகிறது.

திருமுருகன் காந்தியை அபாண்டமாகக் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு தி.வேல்முருகன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply