பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது! -எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது! -எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
***************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டும், அங்கு நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பதிவு செய்த காரணத்திற்காக, அவர் மீதான பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

எதிர்வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் தூத்துக்குடி படுகொலை தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி மே17 இயக்கத்தின் சார்பாக நடைபெறவிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் மனித உரிமை தளத்தில் செயல்படும் செயற்பாட்டாளர்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்க முயற்சிக்கின்றன. அரசுக்கு எதிராகவோ, அரசின் அடக்குமுறைக்கு எதிராகவோ, அரசின் திட்டங்களுக்கு எதிராகவோ எதிர்ப்புக்குரல் எழக்கூடாது என அரசுகள் முயற்சிக்கின்றன. அரசின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடரும் இத்தகைய அடக்குமுறை போக்கை மத்திய, மாநில அரசுகள் நிறுத்திகொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

SDPI கட்சியின் மாநில தலைவர் திரு.நெல்லை முபாரக் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply