சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது செய்யப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.


மக்களின் போராட்டங்களுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் ஒரு மோசமான எதேச்சதிகார காட்டாட்சியினை நடத்தி வருகிறது பாஜகவின் அடியாளாய் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசு.

இந்திய பாஜக அரசின் கார்ப்பரேட் நலனுக்கான திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பாவி மக்களின் நிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு கொடுப்பது எப்படி மக்களாட்சி அறமாக இருக்க முடியும்.

எட்டு வழிச் சாலை திட்டத்தினை எதிர்த்து பேசினாலே குற்றம் என்று கைது வேட்டைகள் சேலத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்கள் நிலத்தை விட்டுத் தரமாட்டோம் என வாக்குவாதம் செய்த மூதாட்டி உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கைது செய்கிறார்கள்.

தொடர்ச்சியாக சேலம் பகுதியில் இந்த திட்டத்தினை எதிர்த்து பிரச்சாரங்களை செய்து வந்த சூழலியல் செயல்பாட்டாளரான பியூஸ் மனூஷை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். சேலம் பகுதியில் மக்களிடையே தொடர்ந்து நீர் நிலைகள் குறித்தும், இயற்கை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் பியூஸ் மனுஷ். இந்திய பாஜக அரசும், தமிழக எடப்பாடி அரசும் இணைந்து கொண்டு ஜனநாயகத்தினை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

எளிய மக்களின் நிலத்தைப் பிடுங்கி, எளிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாத எட்டு வழிச் சாலை திட்டத்தினை அமைப்பதில் மிகத் தீவிரம் காட்டிவருகிறது மத்திய மாநில அரசுகள். கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டிச் சென்றிடவே இந்த புதிய சாலை அமைக்கப்பட இருக்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய பணம் பிடுங்கும் சாலையாகவே இந்த சாலை அமைய இருக்கிறது.

பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் வளர்மதியும் சற்று முன்பு சேலத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த கிராம மக்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்த போது அவரை இழுத்துச் சென்றிருக்கிறது காவல்துறை.

கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதிலிருந்து தோழர் வளர்மதியினை தொடர்ச்சியாக பல முறை குறிவைத்து கைது செய்யும் வேலையினை தமிழக அரசு செய்து வருகிறது.

எட்டு வழிச் சாலை திட்டத்தினை எதிர்த்து போராடும் மக்களுக்கு தமிழ்நாடு துணை நிற்க வேண்டியது அவசியம். நிலத்தையும், காட்டையும், இயற்கையையும், வாழ்வாதாரத்தையும் காக்க மக்கள் போராடுகிறார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக நிற்போம். போராடுபவர்கள் மீதான அடக்குமுறைகளையும் கைதினையும் கண்டிப்போம்.

-மே பதினேழு இயக்கம்

Leave a Reply