மாணவி பிரதீபாவின் இறுதி நிகழ்வு

- in நீட்

நீட் தேர்வின் மூலம் படுகொலை செய்யப்பட்ட மாணவி பிரதீபாவின் இறுதி நிகழ்விற்காக மே பதினேழு இயக்கத் தோழர்கள் பெருவளுருக்கு சென்றோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து சேத்துபட்டு செல்லும் வழியில் அதிலிருந்து பிரிந்து செல்லும் கிளை பாதையில் அமைந்துள்ளது பெருவளூர் கிராமம். அப்படிப்பட்ட சிறிய கிராமத்தில் ஒரு கட்டிடத் தொழிலாளியின் மகளாகப் பிறந்தவள் பிரதீபா. 10ம் வகுப்பில் 490 மதிப்பெண் பெற்று திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் சிறந்த மாணவியாக வந்திருக்கிறார். மாவட்ட ஆட்சியரிடம் பரிசுகள் எல்லாம் பெற்று அந்த ஊருக்கே பெருமை சேர்ப்பவளாக இருந்திருக்கிறாள். மருத்துவக் கனவுடன் 12ம் வகுப்பு தேர்வினை முடித்த பிரதீபா 1125 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய மருத்துவ சீட்டினை நீட் தேர்வின் மூலமாக இந்திய பாஜக அரசு தட்டிப் பறித்தது. அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து சேரப் பணம் இல்லாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

தான் எப்படியாவது மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தில் மீண்டும் இந்த ஆண்டும் நீட் தேர்விற்காக தயார் செய்து எழுதியிருக்கிறார் பிரதீபா. வெளிமாநிலங்களுக்கெல்லாம் உழைத்து கட்டிட வேலை செய்து கிடைக்கும் பணத்தில் தன் மகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் தந்தை.

ஆனால் மீண்டும் தன் கனவை நீட் தேர்வின் மூலம் இந்திய அரசு பறித்ததால் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள் பிரதீபா.

பெருவளூர் முழுவதும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஊருக்கு நடுவே உள்ள அம்பேத்கர் மண்டபத்தின் அருகில் பிரதீபாவின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் எந்த சலசலப்புமின்றி தமிழகத்தின் பிற நகரங்களும், சென்னை மாநகரமும் இயல்பு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கின்றன.

அனிதாவின் உயிரைக் குடித்த நீட் தேர்வு, இந்த ஆண்டு பிரதீபாவின் உயிரைக் குடித்திருக்கிறது. இன்னும் எத்தனை மாணவர்களை நாம் இழக்கப்போகிறோம்?

நீட் தேர்வு மருத்துவத்திலிருந்து பொறியியல், சட்டம், கலை என பல படிப்புகளுக்கும் விரிவடைந்து ஏராளமான கொலைகள் நிகழ்த்தப்படுவதற்கு முன் அது ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவத்துறையை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வழிப்பறி செய்து சிரித்துக் கொண்டிருக்கிறது இந்திய பார்ப்பனியம்.

தமிழ்நாட்டிலேயே கல்வியில் மிகவும் பின் தங்கிய மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். அப்படிப்பட்ட மாவட்டத்தின் சிறிய கிராமத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு பெண், மருத்துவராவது என்பது மிக முக்கியமான விடயம். அது அந்த மாவட்டத்தின் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தினைக் கொடுக்கக் கூடியது. ஒரு தலைமுறையின் கனவை நீட் தேர்வின் மூலம் இந்திய அரசு தட்டிப் பறித்திருக்கிறது.

1125 மதிப்பெண் எடுத்த எங்கள் தங்கைக்கு மருத்துவராகும் தகுதியில்லை என்று பார்ப்பனியமும், இந்திய அரசும் சொல்லுமேயானால், மருத்துவக் கல்லூரிகளே இனி தேவையில்லை. இழுத்து மூடப்படட்டும். நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஒன்றிணைந்து போராடாவிட்டால் நாளை இந்தக் கொலை நம் வீட்டிலும் நடக்கும். சென்னையின் பணக்கார பார்ப்பன குடும்பத்திலிருந்து மருத்துவர்கள் உருவாவதை விட, பெரவளூரின் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மருத்துவர்கள் உருவாவதே முழுமையான சமூக மாற்றத்தினை உருவாக்கும்.

நீ பெரியவனாகி அல்லது பெரியவளாகி என்ன செய்யப் போகிறாய் என உங்கள் குழந்தைகளைக் கேட்பதற்கு முன் ஒரு கணம் யோசித்துக் கொள்ளுங்கள், நீட் தேர்வை ஒழிப்பது உங்கள் கடமை என்பதை.

Leave a Reply